கடன் உச்சவரம்பை உயர்த்த இறுதி முடிவு என்னாச்சு?
உலக வல்லரசு நாடான அமெரிக்காவே திட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகளிடம் கடன்வாங்கித்தான் அரசாங்கத்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கே கடும் நெருக்கடி தரும் சூழல் ஒன்று ஏற்பட்டது. அதுதான் கடன் உச்சவரம்பு, அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்க அரசு வாங்கிய கடனை திரும்ப செலுத்தமுடியாமல் போகும் சிக்கல் உருவானது. மொத்த கடன் அளவான 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் கடன் தொகையை எப்போதோ அமெரிக்க அரசு தாண்டிவிட்டது. இந்த நிலையில் ஜூன் முதல் வாரத்திலேயே அமெரிக்க அரசு சிக்கலை சந்திக்கும் சூழல் உருவானது. இதனால் தனது ஆஸ்திரேலிய பயணத்தையெல்லாம் ரத்து செய்துவிட்டு அதிபர் பைடன் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கு பிரதான இரு கட்சிகளும் இசைவு தெரிவித்துவிட்டதாக மெக்கார்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இது தொடர்பாக பலமுறை பேச அழைத்தும் வராத பைடன், கடைசி நேரத்தில் அவரே தொலைபேசியில் அழைத்து 90 நிமிடங்கள் உரையாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய இசைவு மூலம் அமெரிக்க கடன் தொகையை இனி இன்னும் சற்று உயர்த்திக்கொள்ள முடியும், இதுவும் 2024 வரை மட்டும்தான் அதற்கு பிறகு தேவை ஏற்பட்டால் மாற்றிக்கொள்ளும் வகையில் சட்ட மசோதா தயாராகி வருகிறது. இதனிடையே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் இடையே ஒரு சுமூக தீர்வு எட்டப்படவேண்டும் என்பதால் அமெரிக்க நாடாளுமன்றம் கூடி இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இதனிடையே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் செய்ய எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் தற்போதைய அரசு செய்து வரும் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக எதிர்க்கட்சியினரின் கோரிக்கையில் முக்கியமானது தேவையற்ற செலவுகளை குறைப்பதே. இந்த நிலையில் வரும் ஜூன் மாதத்துக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால், மசோதாவின் வரைவு நகலை படித்துப்பார்க்க அனைத்து எம்பிகளுக்கும் அனுமதியும் கோரப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு கடன் உச்சவரம்பை உயர்த்தும்பட்சத்தில் அந்நாட்டு மந்த நிலை சற்று மீண்டுவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்நாட்டு இரண்டு அவைகளிலும் வரும் புதன்கிழமை வாக்கில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பைடனுக்கு ஆதரவு கிடைக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும், கிட்டத்தட்ட அனைத்து எம்பிகளும் ஆதரவி தெரிவிக்கவே வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் முடிவை பொருமையாக காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.