கோதுமை இல்லை… அரிசியுமா இல்லை..?
கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதை போல, அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நம் நாட்டில், அரிசியின் விலை அதிகரித்துள்ள நிலையில் ,அதன் விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
உலக அளவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் 40 சதவிதம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி தான், என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி முதற்கட்டமாக, நொய் அரிசி என்று சாமானிய மக்கள் அழைக்கும், உடைந்த அரிசியின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவில், இந்த அரிசியை வீட்டு சமையலுக்கு மட்டும் அல்லாமல், கால்நடைகளுக்கான உணவாகவும், எத்தனால் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, உலகிற்கே உணவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு உள்ளாகவே, இந்தியா தன்னுடைய தேவைக்கு தானியங்களை இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவிடம் போதுமான அளவில் கோதுமை கையிருப்பில் இருப்பதாக கூறிய நிலையில், கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், இந்த கட்டுப்பாடு அடுத்த கட்டமாக அரிசிக்கும் வர உள்ளதாக தெரிகிறது.