தங்கத்தில் முதலீடு செய்வதால் இப்படி ஒரு பயன் இருக்கா? இது நம்ம list லயே இல்லையே!
யாருக்குதான் முதலீடு செய்வதில் விருப்பம் இல்லை. நாம் சம்பாதிக்கும் பணம் பெருக வேண்டுமென்று எல்லோரும் விருப்பப்படுவார்கள். ஆனால் அவ்வாறு முதலீடு செய்ய நினைக்கும்போது முதலீட்டில் இருக்கும் பெரிய அபாயமான பணவீக்கத்தை (inflation) மறக்க இயலாது.
பணவீக்கம் என்றால் என்ன? ஆடை, உணவு, எரிபொருள், போக்குவரத்து போன்ற பொதுவான அல்லது அன்றாட பயன்பாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் தொடர்ச்சியான உயர்வு ஏற்படுவதை பணவீக்கம் என்பார்கள்.
பணவீக்கத்தை வெல்லும் வருமானத்தை வழங்க முடியாத ஒரு சொத்தில் நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் ஓய்வூதிய காலத்துக்கான (retirement) பணத்தை உங்களால் பெற முடியாமல் போகலாம். பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சம் உலகலாவிய அளவில் அதிகரித்து வருகிறது.
பல்வேறு முதலீட்டு வகைகளில், தங்கம் பெரும்பாலும் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சிறந்த முதலீடாகப் பார்க்கப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு அடிப்படையில் பணவீக்கத்துக்கு எதிரான நிலைத்த வருமானம் தரக்கூடியதாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. வருகிற காலங்களில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்புப்படி 2022 ஆம் நிதியாண்டில், நுகர்வோர் விலைக் குறியீட்டின் (consumer price index) படி பணவீக்கமானது 5% மேல் இருக்கலாம்.
தங்கத்தின் மீதான முதலீடுகளால் பணவீக்கத்தை முறியடிக்க முடிந்திருக்கிறது என்பதே கடந்த கால வரலாறு. நிதி வருமான (rupee terms) அடிப்படையில், தங்கம் வருடம் ஒன்றுக்கு 10% அளவு வருமானமீட்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அளித்திருக்கும் ஆண்டு வருமானம் 11%. இந்தக் காலகட்டத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டு (Consumer Price Index) எண் 6.3% ஆக இருந்தது. எனவே, நீண்ட கால முதலீட்டைப் பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடுகள் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு உறுதியான பாதுகாப்பாக இருக்கும். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வகை மட்டுமல்ல, பங்குச் சந்தை முதலீடுகள் வருமானத்தை ஈட்டத் தவறிய காலங்களிலும் அது வருமானம் ஈட்டிக் கொடுத்திருக்கிறது.