IIHL-ன் மாஸ்டர் பிளான்!!!
இண்டஸ்இண்ட் வங்கியின் நிறுவனரான IIHL மொரிஷியஸ் நிறுவனம், பஹாமாஸில் உள்ள ஸ்டெர்லிங் வங்கியின் 100% பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்தது.
இந்நிறுவனம் செப்டம்பர் 2022 இல் பஹாமாஸ் ஸ்டெர்லிங் வங்கியில் 51% பங்குகளை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
IIHL இன் தாய் நிறுவனமான IIHL (கேபிடல்), மொரிஷியஸ் மூலம் இந்த கையகப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. கையகப்படுத்தலைத் தொடர்ந்து, ஸ்டெர்லிங் வங்கி “IIHL வங்கி & அறக்கட்டளை லிமிடெட்” என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
IIHL மொரிஷியஸ், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த, நவீன நிதி தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச சந்தைக்கான வாய்ப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பேசிய மொரிஷியஸ் IIHL இன் தலைவர் அசோக் பி. இந்துஜா, “இந்த கையகப்படுத்தல், எங்களின் பல தசாப்த கால அனுபவத்தை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைத்து, IIHL ஐ உலகளவில் விரிவுபடுத்த உதவுகிறது. பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால பலன்களை வழங்குவதற்கான திறனை இது வலுப்படுத்துகிறது. BFSI துறையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 5,000 கோடி டாலர் உலகளாவிய சந்தை மதிப்பை அடைய இது உதவும்” என்றார்.
சமீபத்தில், IIHL நிறுவனம் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட்டின் 100% பங்குகளை கொள்முதல் செய்திருந்தது. அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்களையும் இதன் மூலம் கையகப்படுத்தியுள்ளது.
