இண்டஸ்இண்ட் வங்கி பலே திட்டம்
இண்டஸ்இண்ட் வங்கி, வரும் நிதியாண்டில், சில்லறை கடன்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் சொத்துக்கள், கிராமப்புற வங்கிச் சேவைகளில் கவனம் செலுத்த உள்ளது.
கடந்த கால நிதி குளறுபடிகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை கொண்டுவர வங்கி முயற்சிப்பதாக அதன் தலைவர் சுனில் மேத்தா தெரிவித்தார்.
நிதி குளறுபடிகள்
இந்த ஆண்டு மார்ச் மாதம், இண்டஸ்இண்ட் வங்கி அதன் டெரிவேடிவ் போர்ட்ஃபோலியோவில் ₹1,979 கோடி கணக்குப் பிழை உள்ளதாக அறிவித்தது. மேலும், அதன் உள் தணிக்கை, ₹674 கோடி மைக்ரோஃபைனான்ஸ் வணிகத்திலிருந்து வந்த வட்டி வருவாயாகவும், ₹595 கோடி ‘மற்ற சொத்துக்கள்’ என்றும் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது. இதனால், 2025 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வங்கி ₹2,329 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்தது.
மீண்டும் எழுச்சி கவனம் செலுத்தும் பகுதிகள்
இந்த மோசமான சூழலிலிருந்து மீண்டு வர, வங்கி தற்போது சில்லறை வைப்புத் தொகைகள் பாதுகாக்கப்பட்ட சில்லறை, சொத்துக்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக சுனில் மேத்தா கூறினார். மேலும், கார்ப்பரேட் துறையில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதாகவும், கிராமப்புறங்களில் ‘பாரத் பேங்கிங்’ மூலம் விநியோகத்தை விரிவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய தலைமை, எதிர்காலத் திட்டங்கள்
இந்த நிதி குளறுபடிகள் வெளிவந்த பிறகு, முன்னாள் எம்.டி., தலைமை நிர்வாக அதிகாரி சுமன் கத்ஃபாலியா ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் ராஜீவ் ஆனந்த், இண்டஸ்இண்ட் வங்கியின் புதிய எம்.டி., தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.பி.ஐ. அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஆகஸ்ட் 25, 2025 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அமலுக்கு வரும். புதிய தலைமை, வங்கிக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கும் எனவும், வலுவான நெறிமுறை அடிப்படையுடன் நிலையான, லாபகரமான வளர்ச்சியை அடையும் எனவும் மேத்தா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு, வங்கி தனது நிதி நிலைமையை மேம்படுத்தி, நெறிமுறை, வெளிப்படைத்தன்மை, நீண்ட கால நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் கூறினார்.
