இந்த வங்கியில் சேமிப்பு வைத்திருக்கிறீர்களா? RBI அதன் உரிமத்தை ரத்து செய்கிறது!
ரிசர்வ் வங்கி கோவாவில் உள்ள மார்கோவா நகரத்தில் உள்ள “தி மாட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கி”யின் (The Madgaum Urban Co-operative Bank Limited) உரிமத்தை ரத்து செய்தது. தற்போதைய நிதி நிலையில் வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகையினை முழுமையாக தரமுடியாத சூழலில் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டது.
வங்கிக்குப் போதுமான மூலதனம் (adequate capital) மற்றும் வருமானமீட்டும் வாய்ப்புகள் இல்லை என்றும், வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் (Banking Regulation Act), 1949 இன் பல்வேறு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறி விட்டதாகவும் RBI மேலும் கூறுகிறது. வங்கி தனது தொழிலைத் தொடர அனுமதித்தால் பொது நலன் மோசமாக பாதிக்கப்படும் என்று RBI கூறுகிறது.
வங்கி சமர்ப்பித்த விவரங்களின்படி, சுமார் 99 சதவீத மக்கள் டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திலிருந்து (Deposit Insurance and Credit Guarantee Corporation) தங்கள் வைப்புகளின் முழுத் தொகையையும் பெறுவார்கள். வைப்புத் தொகை காப்பீட்டுத் தொகையிலிருந்து ₹5 லட்சம் வரை மட்டுமே பெற முடியும்.
கோவாவின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் (Office of Registrar of Cooperative Societies) வங்கியை மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்கவும், வங்கிக்கு ஒரு பணப்புழக்கப் பிரதிநிதியை (Liquidator – அதாவது நிறுவனத்தின் சொத்துக்களை விற்க ஒரு நிறுவனத்தின் சார்பாக செயல்பட சட்ட அதிகாரம் உள்ள ஒருவர்) நியமிக்கவும் கோரப்பட்டுள்ளது.
இனி மேலும் வைப்புகளை ஏற்கவோ அல்லது திருப்பிச் செலுத்தவோ வங்கிக்கு அனுமதி இல்லை என்று RBI கூறியுள்ளது. வைப்புத்தொகையாளர்களுக்கு பணம் கூடிய விரைவில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.