சேமிப்புக் கணக்குக்கும் (Savings A/C), நடப்புக் கணக்குக்கும் (Current A/C) என்ன வேறுபாடு?
வங்கிக் கணக்குகளில் பல்வேறு வகைகள் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை சேமிப்புக் கணக்கும், நடப்புக் கணக்கும் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் கணக்குகளாகும்.
இதை வைத்து ரிசர்வ் வங்கி (CASA RATIO) என்பதை கணக்கிடுகிறது. இந்த இரண்டு கணக்குகளைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம்.
சேமிப்புக் கணக்கு (Savings A/C) :
சேமிப்புக் கணக்கு (Savings A/C) என்பது ஒரு தனி மனிதரால் ஒரு வங்கியில் அவர்மட்டுமோ அல்லது வேறு ஒருவருடன் சேர்ந்தோ (Joint Account) ஆரம்பிக்கப்படும் வங்கி கணக்கு ஆகும். இந்த கணக்குகள் ஆண்டுக்கு 2.70 % முதல் 5.25 % வரையிலான வட்டியை ஈட்டக்கூடியவை. சேமிப்புக் கணக்கைப் பராமரிக்கத் தேவையான குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) நடப்புக் கணக்கை (Current A/C) விட மிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் இது வங்கிகளைப் பொறுத்தும், கிராம நகரத்தைப் பொறுத்தோ மாறுபடுகிறது. உங்கள் வழக்கமான பயன்பாடுகளான, ATM அல்லது வங்கியில் நேரடியாக பணம் எடுத்தல், காசோலைகள் வழங்குதல், கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவது மற்றும் நிதிகளை வேறு வங்கிகளுக்கு மாற்றுவது என்பவற்றை சேமிப்புக் கணக்கு மூலம் நீங்கள் செய்ய முடியும்.
சேமிப்புக் கணக்கின் நன்மைகள்:
1) சேமிப்புக் கணக்கில் எஞ்சியிருக்கும் பணம் வட்டி ஈட்டுகிறது.
2) சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதங்கள் 2.70% முதல் 5.25% வரை வங்கிக்கு வங்கி வேறுபட்டு இருக்கிறது .
3) இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகள் உள்ளன.
4) பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தனிப்பட்ட விபத்துக்கள் மற்றும் இறப்பு உட்பட பல்வேறு காப்பீட்டு காப்பீடுகளை வழங்குகின்றன.
5) உங்கள் டெபிட் கார்டு மூலம் இந்தியா முழுவதும் ஏடிஎம்களைப் பயன்படுத்தலாம்.
6) NEFT/IMPS ஆகிய பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது இல்லை.
சில குறைபாடுகள் :
1) மற்ற முதலீட்டுக் கருவிகளை விடக் குறைவான வட்டி.
2) குறைந்த பட்ச இருப்புத் தொகை (Minimum Balance) வைக்காவிட்டால் அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.
நடப்புக் கணக்கு (Current A/C):
நடப்புக் கணக்கு என்பது நிதிக் கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது, இது வங்கிகளுடன் வழக்கமான அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் பராமரிக்கப்படும் ஒரு வகை வைப்புக் கணக்கு ஆகும். இது விண்ணப்பதாரரின் வேண்டுகோளின் பேரில் வங்கிகளால் இந்த கணக்கு தொடங்கப்படுகிறது. நிதி கொடுக்கல் வாங்கல்களுக்கும், வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் உதவுவதற்காக விருப்பத்தின் பேரில் இந்த வகைக் கணக்குகள் வங்கிகளால் வழங்கப்படுகிறது.
நடப்புக் கணக்கின் நன்மைகள்:
1) காசோலைகள் மூலம் பணம் வழங்குவதை அனுமதிக்கின்றன.
2) கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட வரம்பு வரை “ஓவர்டிராஃப்ட்” வசதியைப் பெறலாம்.
3) நடப்பு வங்கிக் கணக்கு என்பது ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும்.
4) பணம் எடுத்தல் மற்றும் செலுத்துதலில் எந்த வரம்புகளும் இல்லை.
5) இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி வசதிகளை வழங்குகிறது.
6) ஒரு நாளில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
சில குறைபாடுகள்:
1) சேமிப்புக் கணக்குடன் ஒப்பிடுகையில், நடப்புக் கணக்கிற்கு அதிக குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) தேவைப்படுகிறது.
2) பெரும்பாலான நடப்புக் கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படுவதில்லை.
3) NEFT/IMPS ஆகிய பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
4) பணம் எடுத்தல் மற்றும் செலுத்துதலில் இருக்கும் வரம்புகள்.
5) குறைந்தபட்ச இருப்புத்தொகை (minimum balance) பராமரிக்கப் படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.