இந்திய யூனிகார்ன்களுக்கு உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை – விவேக் கவுல்
நான் என் வாழ்க்கையில் 22 மாதங்களை வணிகப் பள்ளிகளில் வீணடித்திருக்கிறேன், குறைந்த அளவில் தான் அங்கே நிரந்தர ஆசிரியர்கள் இருந்தார்கள், புனே நகரின் எல்லா வணிகப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் தான் இருந்தார்கள், அவர்கள் ஃபிரீலான்ஸ் முறையில் வேலை செய்தார்கள், வணிகப் பள்ளிகளின் செலவுகளைக் குறைக்க இது பெருமளவில் உதவியது. வணிக மாதிரிகளைப் பொறுத்தவரை, இது பரிதாபகரமானது, வணிகப் பள்ளியைத் துவங்கியவர்களுக்கு அவர்கள் செய்த மூலதனத்தை ஒப்பிட்டால் மிக உயர்ந்த வருமானம் இருந்தது, இத்தகைய கற்பித்தல் முறை அழியும் வரை, அது பரிதாபகரமான ஒன்றாகவே இருந்தது. ஃப்ரீலான்ஸ் ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் இரண்டு சொல்லாடல்களைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தோம், முன்னுதாரண மாற்றம் மற்றும் மதிப்பு என்ற இரண்டு விஷயங்கள் தான் அவை. ஆசிரியர்கள் நாம் என்ன செய்கிறோம் என்று அறிந்து கொள்வதற்கு முன்பாகவே மாணவர்கள் இந்த சொல்லாடல்களை எடுத்துக் கொண்டு தங்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளத் துவங்கி விட்டிருந்தார்கள்.
பெரும்பாலான சூழல்களில், ஒரு முன்னுதாரணமான மாற்றம் நடப்பது போலத்தான் எங்களுக்கும் தோன்றியது, எனவே நாங்கள் அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுத்தோம், அது இல்லையென்றால், நாங்கள் மதிப்பை குறித்து சொல்லிக் கொடுத்தோம். வேறு ஏதும் இல்லாதபோது நாங்கள் முன்னுதாரணமான மாற்றத்தைப் பிடித்துக் கொண்டிருந்தோம், ஆனால் மதிப்பு என்பது சற்று தந்திரமான பயன்பாடாக இருந்தது, இப்போதும் கூட அப்படித்தான் இருக்கிறது.
2006-ல் சில நாட்களுக்கு, நான் என் தாயை மும்பை கொலாபாவில் உள்ள கஃபே மொண்டேகருக்கு அழைத்துச் சென்றேன், நான் அது ஒரு சிறந்த காலை உணவு என்று நினைத்தேன். ஆனால், அம்மாவோ பரிமாறப்பட்ட உணவுகள் அப்படி ஒன்றும் மதிப்புக் கொண்டவை அல்ல, அதன் விலையும் கூட மிக அதிகம் என்று நினைத்தார், இவை அனைத்தையும் வீட்டில் நம்மால் எளிதாக சமைத்திருக்க முடியும் என்று அம்மா உணர்ந்தார். ஆனால், நானோ வார இறுதி நாட்களில் நாம் வீட்டில் சமைக்க வேண்டாம், ஆகவே இது மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று நினைத்தேன்.
அதுபோலவே மதிப்பு என்பது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அர்த்தம் கொடுக்கக்கூடியது. ஆனால் ஒரு நாளின் முடிவில், பொருளாதார பரிவர்த்தனை என்பது பணம் கொடுக்கும் தரப்பு அதன் மீது மதிப்பு கூட்டப்படுவதைப் பார்க்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் அதற்கு பணம் செலுத்துவார்கள். மில்டன் ஃப்ரீட்மன் முதலாளித்துவம் மற்றும் சுதந்திரம் என்ற நூலில் எழுதுவது போல் “குடும்பம் எப்போதும் தனக்காக நேரடியாக உற்பத்தி செய்யும் திட்டத்தைக் கொண்டிருப்பதால், பயன்கள் இல்லையென்றால் எந்த ஒரு பரிமாற்றத்திலும் ஈடுபடத் தேவையில்லை. ஆகவே, இரு தரப்பினரும் பயனடையாவிட்டால் நடக்கும் எந்த பரிமாற்றமும் பயனற்றது.”
கஃபே மொண்டேகரில் நாங்கள் சாப்பிட்ட காலை உணவில், என் அம்மா எந்த மதிப்பையும் பார்க்கவில்லை, ஏனென்றால் அவர் ஒருவேளை குறைந்த செலவில் வீட்டில் இதே போன்ற காலை உணவை செய்திருக்கலாம் என்று நினைத்தார். ஒருவேளை அவர் பணம் கொடுப்பதாக இருந்தால், இந்த பரிவர்த்தனை ஒருபோதும் நடந்திருக்காது. மறுபுறம், வார இறுதி ஒன்றில் அம்மா வேலை செய்வது பிடிக்காமல் நான் காலை உணவுக்கு அவரை வெளியே அழைத்துச் சென்றேன், என்னைப்பொறுத்த வரை மதிப்பு குறித்த விஷயமில்லை அது.
இன்னொருமுறை நிரம்பியிருந்த ஒரு விமானத்தில் சாண்ட்விச்சுக்கு 250-300 ரூபாய் கொடுக்கும்போது நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்.ஆனாலும், நான் பணம் கொடுத்து அதை வாங்கினேன், ஏனென்றால் அங்கு ஒரு மாற்று ஏற்பாடு இல்லை. இதை வாசித்துக் கொண்டிருக்கும் எனது அன்பானவர்களே, நான் ஏன் மதிப்பு மீது பெருங்கோபத்தில் இருக்கிறேன் என்று உங்கள் தலையை சொறிந்து கொள்வதற்கு முன்பாக என்னை விளக்க அனுமதியுங்கள். இந்த இதழில், யூனிகார்ன்கள் செயல்படும் வணிகங்களின் நீண்ட கால மதிப்பானது, நாட்டின் பெரிய பொருளாதார சமூக செயல்பாடுகளுடன் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.
குறைவான எண்ணிக்கையில் தான் பல ஆண்டுகளாக இந்தியப் பெண்கள் வேலை செய்து வருகிறார்கள், வேலை செய்யும் இந்திய பெண்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.(நான் பெண்களின் வேலை என்று குறிப்பிடுவது, பணம் பெறுகிற வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான புள்ளியாகும், ஏனெனில் பெண்கள் அனைவரும் வீட்டில் ஊதியமின்றி வேலை செய்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் அப்படி செய்வதில்லை) உலக வங்கியின் தரவுகளிலிருந்து பெறப்பட்ட கீழே உள்ள விளக்கப்படத்தை பாருங்கள்.இது பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தைக் காட்டுகிறது, இது 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பொருளாதாரத்துடன் தொடர்பில் உள்ள பெண்களின் விகிதமாகும்.1990 க்கும் 2005 க்கும் இடையில் வேலை செய்யும் பெண்களின் விகிதம் 31.8% ஆக உயர்ந்தபோது ஒரு நிலையான வளர்ச்சி இருந்தது. அதற்குப் பிறகு அது பெரும்பாலும் வீழ்ச்சியடைந்து வருகிறது. 2019 இல், இந்த விகிதம் 20.8% ஆக இருந்தது. சுவாரஸ்யமாக, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தரவு இதே போன்ற ஆனால் மிக மோசமான போக்கை காட்டுகிறது.
பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம், மே 2016 இல் 17.7% அதிகபட்சமாக இருந்து செப்டம்பர் 2021 இல் 10.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இந்த விகிதம் 7.8% ஆக குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் இது 11.5%. சி.எம்.ஐ.இ தரவுகள் சொல்வது என்னெவென்றால் நிலைமை உலக வங்கியின் புள்ளிவிவரங்கள் சொல்வதை விட மிக மோசமாக உள்ளது என்பதுதான். ஆனால், இரண்டு தரவுகளும் வீழ்ச்சியை நோக்கி சொல்வதைத்தான் குறிப்பிடுகிறார்கள்.
இது ஏன் நடக்கிறது? பரந்த அளவில் பார்க்கும் போது, இது ஒரு உலகளாவிய போக்கு.1990 க்கும் 2019 க்கும் இடையில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 51.2% இல் இருந்து 47.3% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை வீழ்ச்சியானது பெரும்பாலும் அடித்தட்டில் மிக அதிகமாக இருக்கிறது. இங்கே ஒரு சிறிய விளக்கம்: பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள், இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் இந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகித வீழ்ச்சிக்குக் காரணம் அதுவாக இருக்க முடியாது. வருமானம் உயர்ந்துள்ளது, இன்னொன்று வேலை செய்யும் பெண்கள் மீது இருக்கும் சமூக உளவியலைக் கருத்தில் கொண்டு, குறைவான பெண்கள் தான் தங்கள் குடும்பங்களில் உள்ள ஆண்களால் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை இது 2014 வரை உண்மையாக இருந்திருக்கலாம், அப்போது வருமான வளர்ச்சி இரட்டை இலக்கங்களில் இருந்தது. ஒப்பீட்டளவில் இப்போது வருமான வளர்ச்சி ஆண்டுக்கு 10% க்கும் குறைவாக உள்ளது. 2019-20 இல் வருமான வளர்ச்சி விகிதம் 6.8% ஆக இருந்தது, இன்று 2020-21 இல், செலவு செய்யக்கூடிய அளவிலான வருமானம் 3.8% வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.
மேலும், இது ஒரு இந்தியர் சராசரியாக செலவழிக்கும் வருமான வளர்ச்சி என்பதையும், சராசரி இந்தியர்களின் செலவழிக்கக்கூடிய வருமான வளர்ச்சி அல்ல என்பதை நினைவில் கொள்வது மிக முக்கியமானதாகும், இது ஒரு விசித்திரமான விஷயம். ஒரு சராசரி இந்தியரின் செலவழிக்கக்கூடிய வருமான வளர்ச்சி என்பது ஒரு இந்தியரின் சராசரி செலவழிக்கும் வருமான வளர்ச்சியை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். இங்கு அதிக வருமானம் காரணமாகவே குறைவான பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்ற வாதம் இல்லாமல் போய்விடும். இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்டது என்பது ஒருவேளை சரியானதாக இருக்கலாம். பெண்களின் மிகப்பெரிய முதலாளியாக இருந்த விவசாயம் இந்தியப் பொருளாதாரத்திற்கு அளித்து வந்த மிகப்பெரிய பங்களிப்பு குறைந்து வருகிறது. விவசாயத்தில் இயந்திரமயமாக்கல் அதிகரித்து வருகிறது, ஒருவேளை இது பல பெண்களை அவர்களின் வேலைகளில் இருந்து வெளியேற்றியிருக்கலாம்.
பொதுவாக, இந்த தொழிலாளர் குழுவானது ஆண்களை விடப் பெண்களை அதிகமாக வேலைக்கு அமர்த்தும் பிற துறைகளுக்கு சென்றிருக்கலாம். ஆனால் அதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. 2021 பிப்ரவரியில் “தி எக்கனாமிஸ்ட்” இதழ் சுட்டிக்காட்டியதைப் போல: “இந்தியாவின் இந்த வீழ்ச்சி, அண்டை நாடான பங்களாதேஷில் செழித்து வளரும் ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற தீவிர தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான நட்பார்ந்த சூழல் மூலம் நிகழ்ந்திருக்கிறது.” இந்த வணிகச் சூழல் பெண்களின் வேலைவாய்ப்பில் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. தற்போது கண்டறியப்பட்ட காரணிகளை விட இந்த வீழ்ச்சிக்கு இன்னும் நிறையக் காரணங்கள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், தெளிவான விளக்கங்கள் நமக்கு கிடைக்க வேண்டும். நான் இது பற்றிக் கவலைப்பட முக்கிய காரணம், இது பெண்கள் தங்கள் குடும்பங்களால் வேலை செய்ய அனுமதிக்கப்படும் வாய்ப்புகள் உட்பட பெண்களின் வாழ்க்கையில் அனைத்து வகையான விஷயங்களையும் பாதிக்கிறது என்பதுதான்.
இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும், அதிகமான அளவில் பெண்கள் வேலை செய்யும் போது, மேலதிகமான பெண்கள் வேலை செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது. பொருளாதார வல்லுனர் எரிகா ஃபீல்டும் அவரது சகாக்களும் 2019 வேலை குறித்த ஒரு கட்டுரையில் எழுதுவது போல், “பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவது பரந்த சமூக மாற்றத்தை உருவாக்கும் காரணியாகும், குறிப்பாக பழமைவாத ஆண்கள், பெண்கள் குறித்த முற்போக்கான விஷயங்களை ஏற்றுக்கொள்வதற்கான அல்லது சமூக மாற்றம் பற்றிய தங்கள் நம்பிக்கைகளை புதுப்பித்துக் கொள்ள உதவும்.”
என்னுடைய வழக்கமான கட்டுரைப் போக்கில், நான் கட்டுரையை இங்கே முடித்திருப்பேன்.ஆனால் நான் உட்பட நாம் அனைவரும் மேற்கண்ட விஷயங்கள் உருவாக்கும் தாக்கங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு உலகத்தில் வாழ்வதால் தொடர்ந்து வாசியுங்கள்.
என்னைப் பொறுத்தவரை இதன் பொருள் என்ன?
குறைவான பெண்கள் தான் வேலை செய்கிறார்கள் என்பது சமூகத்தின் ஒட்டுமொத்த நோயின் அறிகுறியாகும், இது ஒரு குறைந்த பொருளாதார நடவடிக்கை, பொருளாதார நடவடிக்கைகள் குறைவது வளர்ச்சியை அழிக்கும், ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் சரிந்துள்ளது. உலக வங்கியின் தரவுகளின்படி ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 1990 இல் 84.7% இல் இருந்து 2019 இல் 75.9% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2016 ஜனவரியில் CMIE யின் தரவுகளின் படி 75.1% ஆக இருந்த இந்த விகிதம் 2021 செப்டம்பரில் 67.3% ஆக குறைந்துள்ளது என்று கூறுகிறது. இதன் பொருள் வேலை கிடைக்காதவர்கள் தொழிலாளர் சந்தையில் இருந்தே வெளியேறுகின்றனர் என்பதுதான்.
குறைந்து வரும் வேலைகள் என்பது பல குடும்பங்களில் குறைந்து வரும் வருமானத்தைக் குறிக்கிறது, அதுமட்டுமல்ல, குறைந்த வருமானம் என்பது குறைந்த செலவினங்களையும் குறிக்கிறது. குறைந்த செலவு என்பது குறைந்த வணிக வாய்ப்புகளைக் குறிக்கிறது. இந்தத் தரவுகள் கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் நுகர்வோர் செலவின மந்தநிலையை விளக்குவதாக இருக்கிறது. இது மற்றொரு போக்கு பற்றியும் நமக்கு சொல்கிறது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்து வருகிறது என்பது வேலை தேவைப்படும் பலரைக் கண்டுபிடிக்க முடியாது என்பதாகும். இருப்பினும், பொருளாதாரம் வளர்ந்து வந்திருக்கிறது (2020-21 தவிர). இதன் அடிப்படை உண்மை என்னவென்றால் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள் தொகையில் வசதியான பிரிவினருக்கு மட்டுமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான், இது மக்கள் தொகையின் பல்வேறு பிரிவுகளில் பொருளாதார வளர்ச்சி சமமாக விநியோகிக்கப்படவில்லை என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.
பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் அதிக வருமானம் என்ற கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள், குறிப்பாக யூனிகார்ன்கள் மற்றும் பொதுவான வணிகங்கள் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கம். இந்தியாவில் பெரும்பாலான யூனிகார்ன்கள் சேவை வணிகத்தில் தான் உள்ளன. எடுத்துக்காட்டாக உணவகங்களில் இருந்து உணவை வழங்கும் சோமாட்டோ அல்லது ஸ்விக்கியின் விஷயத்தை நாம் எடுத்துக் கொள்வோம். ஒரு உழைக்கும் பெண் இந்த வணிக மாதிரிகளில் உணவை ஆர்டர் செய்யும் போது மதிப்பை அளவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒரு வேலைக்குப் போகும் பெண் தனது குடும்பத்திற்காக சமைக்க வேண்டுமென்றால் அதற்கான நேரம் மிகக் குறைவானதாக இருக்கும் எனவே, அவர் ஆர்டர் செய்ய அதிக வாய்ப்புள்ளது (இந்திய வீடுகளில் பெரும்பாலான ஆண்கள் சமைக்க மாட்டார்கள்).மேலும், அவர் ஆர்டர் செய்ய பணம் வேண்டும் தேவைப்படும், அவர் வேலைக்குச் செல்பவராக இருந்தால் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை, இதே போலவே மளிகைப் பொருட்களின் விநியோகப் பயன்பாடுகளிலும் நடக்கும், குறைந்த நேரம் கொண்ட ஒரு வேலைக்குப் போகும் பெண், உள்ளூர் சந்தைக்கு செல்வதை விட, வீட்டில் வந்து கொடுக்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி பொருட்களைப் பெற விரும்புவார்.
இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் இன்னும் அதிக அளவில் பொருளாதார பயணம் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் பல்வேறு சேவைகளை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. ஆன்லைன் அழகுப் பொருள் விற்பனையாளராக நைக்காவின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது போன்ற நிறுவனங்கள் பெண்கள் வேலைகளுக்கு அதிக அளவில் செல்லும் போது அதாவது பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்தால் அதிக அளவில் பயனடைவார்கள். ஓலா, உபேர் போன்ற வாடகை வாகன சேவையாளர்கள் கூட பெண்கள் அதிகளவில் வேலைக்குப் போகும் போது பெரிய அளவில் பயனடைவார்கள், அவர்கள் பல இடங்களுக்கு சென்று வர ஒரு வாகனம் தேவை, அப்போது அவர்கள் ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது குறித்தும் சிந்திப்பார்கள்.பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் துவங்கினால், அமேசான், ஜியோமார்ட், பிளிப்கார்ட் வரை அனைவரும் பயனடைவார்கள். ஃபோன்பே மற்றும் பேடிஎம் மற்றும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஹாட்ஸ்டார் வரை பெண்கள் வேலைக்குப் போவதால் பயனடைவார்கள்.
ஜூலை 2018 இல், எகனாமிஸ்ட் இதழில் “ஆண்கள் அளவுக்கு பெண்களின் வேலைவாய்ப்பு விகிதங்கள் அதிகரிப்பது என்பது இந்தியாவுக்கு கூடுதலாக 235 மில்லியன் தொழிலாளர்களை வழங்குவதாக இருக்கும்” என்று சுட்டிக்காட்டுகிறது. இது நாட்டை 27% பணக்காரர்களைக் கொண்டதாக மாற வழிவகுக்கும். மறுபுறம், குறைவான பெண்கள் வேலைக்குப் போவதால் நிலைமை மாறாது, இது யூனிகார்ன்கள் மற்றும் பிற தொழில் முனைவோர் குறைந்தபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஆபத்தான போக்காக இருக்கும். இப்போது தொழில் முனைவோர்களில் பலர் ஆரம்ப பொது வழங்கல்கள் (IPO) மூலம் மூலதனத்தை திரட்டும் நடுவில் இருப்பதால், அவர்கள் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ளப் போவதில்லை.
பிரச்சனை என்னவென்றால், புதிய யூனிகார்ன்கள், வணிகங்கள் இறுதியில் எப்படி மாறும் என்பதை “பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் புரிய வைக்கிறது. பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் மூலம் கிடைக்கும் வருமானம் இந்தியாவின் “மக்கள்தொகை ஈவுத்தொகை” என்று அழைக்கப்படுகிறது, இது பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதித்து செலவழிக்க வேண்டும், அதுதான் இந்தியாவை விரைவான பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும், கடந்த இரண்டு பத்தாண்டுகளாக நமக்கு இது உணர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் பார்த்துக் கொண்டிருப்பது போல், அது வெறும் பொருளாதார சிக்கல் அல்ல, மாறாக சமூகவியல் சார்ந்த பிரச்சனை. நாம் உண்மை என்று உணரும் பல விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம், இது ஒரு தவறான போக்கு.
இறுதியாக, வணிக செயல்திறன் என்பது எல்லா நேரங்களிலும் பொருளாதார வளர்ச்சியோடு மட்டுமே தொடர்பு கொண்டதாக இருக்க முடியாது, சமூகம் சார்ந்த விஷயங்களையும் அது உள்ளடக்கியது, அதிகபட்சமாக அது வாழ்க்கையோடு தொடர்புடையது, அல்லது உறுதியாக எதிர்காலத்தில் அப்படித்தான் இருக்கும்.