HCL Technologies ,அமிதாப் காந்தை நிர்வாகம் சாராத சுயாதீன இயக்குநராக நியமித்துள்ளது
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னாள் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்தை, ஐந்து ஆண்டுகளுக்கு அதன் இயக்குநர்கள் குழுவில் நிர்வாகம் சாராத சுயாதீன இயக்குநராக நியமித்துள்ளது. இந்த நியமனம் செப்டம்பர் 8, 2025 முதல் செப்டம்பர் 7, 2030 வரை ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இந்த நியமனம் நிறுவனத்தின் நியமனம், ஊதியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குதாரர்களின் ஒப்புதலை தபால் வாக்கு மூலம் பெறுவோம் என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமிதாப் காந்த்துக்கு நிறுவனத்தின் எந்த ஒரு இயக்குநருடனும் தொடர்பு இல்லை. மேலும், அவர் செபி அல்லது வேறு எந்த அதிகார அமைப்பாலும் பதவியில் இருந்து தடுக்கப்படவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
அமிதாப் காந்த், தனது 69 வயதில், ஜூன் 16, 2025 அன்று இந்தியாவின் ஜி20 ஷெர்பா பதவியில் இருந்து விலகினார். “அரசுக்கு 45 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவை செய்த பிறகு, நான் புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன்” என அவர் தனது லிங்க்ட்இன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அமிதாப் காந்த் தனது பணியில் பல சீர்திருத்தங்கள், புதுமைகள் ஆகியவற்றை முன்னெடுத்துள்ளார். அவர் 2022 இல் ஜி20 ஷெர்பாவாக பொறுப்பேற்று, 2023 இல் இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவிக் காலத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
கேரளாவில் பணியாற்றியபோது, நகர்ப்புற புனரமைப்பு முயற்சிகளை வழிநடத்தினார். மேலும், ‘காட்’ஸ் ஓன் கண்ட்ரி’ சுற்றுலா பிரச்சாரத்தை முன்னெடுத்தார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தில், உலகளவில் பிரபலமான “இன்கிரெடிபில் இந்தியா” பிரச்சாரத்தைத் தொடங்கினார். இது சுற்றுலா வருவாயை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவியது.
அவர் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, ‘ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்ஸ் ப்ரோக்ராம்’, ‘அடல் இன்னோவேஷன் மிஷன்’ போன்ற திட்டங்களை வழிநடத்தினார். மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட வேதியியல் செல்கள் உள்ளிட்ட கொள்கை முயற்சிகளை முன்னெடுத்தார்.
தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் செயலாளராக, ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’, ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ போன்ற சீர்திருத்தங்களை வழிநடத்தினார். இது உலக வங்கியின் ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ தரவரிசையில் இந்தியா 79 இடங்கள் முன்னேற உதவியது.
