அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முதல் காலாண்டு (Q1) முடிவுகள்
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு (Q1) முடிவுகள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இந்நிறுவனம் ₹593.73 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டை விட 13% அதிகம். நிறுவனத்தின் வருவாய் ₹8,724.51 கோடியாக உயர்ந்து, 1.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஒருங்கிணைந்த லாபத்தைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் உரிமையாளர்களுக்குச் சேரவேண்டிய நிகர லாபம் ₹611.07 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 20% உயர்ந்துள்ளது.
இந்த காலாண்டில், வணிக வாகன விற்பனையில் அசோக் லேலண்ட் வரலாறு காணாத சாதனையைப் படைத்துள்ளது. மொத்தம் 44,238 யூனிட் வணிக வாகனங்களை விற்பனை செய்து, அதன் சந்தைப்பங்கை 28.9%லிருந்து 30.7% ஆக உயர்த்தியுள்ளது.
நடுத்தர, கனரக வணிக வாகன (MHCV) பிரிவில், அதன் டிரக் விற்பனை 2% வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில், பேருந்து பிரிவில் தனது தலைமை நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.
இலகு ரக வணிக வாகன (LCV) விற்பனை 15,566 யூனிட்டுகளை எட்டி, புதிய சாதனையைப் படைத்தது. மேலும், ஏற்றுமதி 29% உயர்ந்து 3,011 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் லாப வரம்பும் மேம்பட்டுள்ளது. EBITDA (வட்டி, வரி, தேய்மானம், கடனடைப்புக்கு முன் வருவாய்) லாப வரம்பு 10.6%லிருந்து 11.1% ஆக உயர்ந்துள்ளது. பவர் சொல்யூஷன்ஸ், ஆஃப்டர்மார்க்கெட், பாதுகாப்புத் துறை வணிகங்களும் இந்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்துள்ளன.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, சந்தை செயல்பாடு, செலவு மேலாண்மை மூலம் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் மின்சார வாகன துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி லாபகரமான EBITDA-ஐ அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இரட்டை இலக்க லாப வரம்புகளை எட்டுவதே இலக்கு என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்கள் மின்சார வாகன துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி தொடர்ந்து வளர்ச்சி பெற்று, சாதகமான EBITDA-ஐ எட்டியுள்ளது. சர்வதேச சந்தைகள், பாதுகாப்புத் துறை வணிகத்தில் எங்கள் முயற்சிகளை மீண்டும் வலுப்படுத்தி வருகிறோம்.
எங்கள் தயாரிப்புகளின் மேன்மை, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தி, இத்துறையில் முக்கியப் பங்கை வகிக்க நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
