அமெரிக்க நிறுவனத்தின் அசத்தல் திட்டம்
அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனமான எலி லில்லி, இந்தியாவில் அதன் உற்பத்தி அளவை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தியில் 100 கோடி டாலர் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு உலகளாவிய திறன் மையத்தை (GCC) நிறுவ உள்ளது. அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு, எடை இழப்பு மருந்தான orforglipron மருந்தின், வாய்வழியே உட்கொள்ளும் ரகத்தை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஒப்பந்த உற்பத்தியாளர்களுடனான கூட்டு முயற்சிகள், அதன் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை விரிவுபடுத்தவும், உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு புதிய மருந்துகளை அளிக்கவும் உதவும் என்று இந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2020 முதல், லில்லி நிறுவனம் அமெரிக்காவிலும், பல்வேறு உலக நாடுகளிலும் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்க, விரிவுபடுத்த மற்றும் கையகப்படுத்த சுமார் 5,500 கோடி டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.
சுமார் ₹752 கோடி மதிப்புள்ள உடல் பருமன் எதிர்ப்பு மருந்து சந்தையைக் கொண்ட இந்தியா, லில்லியின் எடை இழப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் முக்கிய சந்தையாக விளங்குகிறது.
இந்தியாவில் ஒப்பந்த உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மேற்பார்வையை வழங்க, ஹைதராபாத்தில் ஒரு புதிய உற்பத்தி மற்றும் தர மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இது பொறியாளர்கள், வேதியியலாளர்கள், பகுப்பாய்வு விஞ்ஞானிகள் மற்றும் தரக் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை துறை நிபுணர்கள் போன்றவர்களுக்கு புதிய வேலைகளை உருவாக்க வழிவகுக்கும்
