என்ஃபீல்டு உற்பத்தி பாதிப்பு காரணம் என்ன?
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் ஐஷர் மோட்டார்ஸ், 2025 – 26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1FY26) சில செயல்திறன் மிக்க மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி அரிய மண் காந்தங்களின்(rare earth metals) பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பற்றாக்குறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா விதித்த அரிய மண் காந்தங்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க, நிறுவனம் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு மாறியுள்ளது. ஐஷர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி. கோவிந்தராஜன், வருவாய் அறிக்கை வெளியீட்டிற்குப் பிந்தைய ஆய்வாளர்களுடனான ஒரு சந்திப்பில், “நாங்கள் குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பே மாற்றுப் பொருட்களுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம்.
இப்போது அந்த மாற்றுப் பொருட்களின் இறக்குமதி பெரிய சிக்கல் இல்லை” எனக் கூறினார். இதன் மூலம், பற்றாக்குறையை நிர்வகிப்பதில் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளதை அறிய முடிகிறது.
இந்த அரிய மண் காந்தப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மாடல்களில் ஹிமாலயன், ஸ்கிராம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கொரில்லா ஆகியவை அடங்கும்.
இந்த மாடல்கள் ராயல் என்ஃபீல்டுவின் முக்கிய தயாரிப்பு பிரிவில் அடங்குவதால், உற்பத்தி பாதிப்பு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை ஓரளவு பாதிக்கக்கூடும்.
ஐஷர் மோட்டார்ஸ் மட்டுமல்லாது, டிவிஎஸ் மோட்டார், ஓலா எலெக்ட்ரிக் போன்ற பிற இந்திய வாகன உற்பத்தியாளர்களும் அரிய மண் காந்தங்களுக்கு மாற்று வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
மாருதி சுசுகியின் ஒரு மூத்த அதிகாரி இந்தப் பற்றாக்குறையை ‘சவாலான நிலைமை’ என விவரித்தார். இந்தத் தாக்கத்தைக் குறைக்க பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், விநியோகச் சங்கிலி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை இந்திய வாகனத் துறைக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளன என்பதை இது காட்டுகிறது.
