இரண்டாகப் பிரியும் கோத்ரேஜ் நிறுவனம் !
இந்தியாவின் பாரம்பரியமான நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் நிறுவனம் இரண்டாகப் பிரிகிறது. இதற்கு இரு தரப்பும் சம்மதித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, 4.1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட கோத்ரேஜ் குழுமத்தை ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் கோத்ரேஜ் ஒரு பக்கமும், அவரது நெருங்கிய உறவினர்களான ஜம்சத் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜும் பிரித்துக் கொள்கின்றனர் என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
124 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் பூட்டு தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, அதன் பிறகு முதன்முதலாக வெஜிடபிள் ஆயில், சோப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரித்தது. தற்போது நான்காம் தலைமுறை வணிகத்தை இந்தக் குழுமம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கோத்ரெஜ் நிறுவனம் நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட், பொறியியல் தொடர்புடைய ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஆகும். இதனை பிரிப்பது தொடர்பாக பல மாதங்களாக விவாதிக்கப்பட்டு வந்தது, இப்போது ஆதி கோத்ரேஜின் மகன் பிரோஷா கோத்ரெஜ் மூலம் வேகம் எடுத்துள்ளது.
“கோத்ரெஜ் குழுமம் அதன் பங்குதாரர்களுக்கு உயர்ந்த மதிப்பை உறுதி செய்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீண்டகால மூலதனத் திட்டங்களில் பணியாற்றி வருகிறது” என்று கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
“இது ஒரு பெரிய அளவிலான பிரிவு, இதில் ஒரு பகுதியாக நாங்கள் 14 பேர் வெளியிலிருந்தும் ஆலோசனை பெற்று வந்துள்ளோம், குடும்பங்களுக்கு இடையேயான இந்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.