Groww – Sebi ஒப்புதல், 7–8 பில்லியன் மதிப்பீட்டில் 1 பில்லியன் IPO
க்ரோ (Groww) – செபி (Sebi) ஒப்புதல், 7–8 பில்லியன் மதிப்பீட்டில் 1 பில்லியன் ஐ.பி.ஓ. (IPO)
நிதி முதலீட்டு தளம் க்ரோ, தனது ஆரம்ப பங்கு வெளியீடு எனப்படும் ஐ.பி.ஓ. மூலம் சுமார் 1 பில்லியன் டாலர் திரட்டுவதற்கு இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியம் செபியிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது.
இந்த ஐ.பி.ஓ. இந்தியாவில் மூலதன சந்தை நிறுவனத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய நிதி திரட்டலாகும். இதன் மூலம் க்ரோவின் மதிப்பீடு 7 முதல் 8 பில்லியன் டாலராக உயரும். கடந்த ஜூன் மாதம், ஜி.ஐ.சி. (GIC), ஐகானிக் கேப்பிடல் (ICONIQ Capital) ஆகியவற்றிடமிருந்து 202.3 மில்லியன் டாலர் முதலீடு பெற்று, நிறுவனம் 7 பில்லியன் மதிப்பீட்டில் இருந்தது.
மே 26 அன்று, க்ரோ ரகசிய முறையில் செபிக்கு விண்ணப்பித்தது. இத்தகைய ரகசிய விண்ணப்பம் நிறுவனங்களுக்கு தங்கள் ஐ.பி.ஓ. ஆவணங்களை பொதுவில் வெளியிடாமல், கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்தை அறிய வழிவகுக்கிறது.
2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட க்ரோ, இன்று இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தக நிறுவனம். 1 கோடி 26 லட்சம் செயலில் உள்ள பயனாளர்களைக் கொண்டுள்ளது.
மியூச்சுவல் பண்டு முதலீட்டிற்கான மிகவும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கிறது. மேலும், 2025 மே மாதத்தில், 150 மில்லியன் டாலர் மதிப்பில் ஃபிஸ்டம் எனப்படும் செல்வ மேலாண்மை தொழில்நுட்ப நிறுவத்தை முழுமையான பண ஒப்பந்தத்தில் கைப்பற்றியது.
2025 நிதியாண்டில் க்ரோ 1,818 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம். மொத்த வருவாய் 4,056 கோடி ரூபாய்.
க்ரோ அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தனது தலைமையகத்தை 2024 நவம்பரில் மாற்றியது. இதன் நோக்கம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலாவது. க்ரோவிற்கு டைகர் குளோபல், பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ் ரிபிட் கேப்பிடல் (Ribbit Capital) போன்ற முதலீட்டாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
