ஐ.டி.சி-யின் புதிய அப்டேட்
வேகமாக வளர்ந்து வரும் உடனடி வர்த்தகத்தின் (quick commerce) தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், ஐ.டி.சி ஃபுட்ஸ் நிறுவனம், குறுகிய கால பயன்பாட்டுக்குரிய புதிய தொகுக்கப்பட்ட உணவுப் பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. நிறுவனத்தின் உணவுப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் மாலிக், பிஸ்கட்டுகள், கேக்குகள், சப்பாத்திகள் போன்ற புதிய பொருட்களை, சன்ஃபீஸ்ட், ஆசீர்வாத் பிராண்டுகளின் கீழ் அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நுகர்வோர் மத்தியில், நீண்ட நாட்கள் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை விட, புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஐ.டி.சி ஒரு சிறப்பு உத்தியை வகுத்துள்ளது.
புதிய பொருட்களை அன்றாடம் தயாரித்து, உள்ளூர் உற்பத்தி, விநியோக முறைகளைப் பயன்படுத்தி, அடுத்த நாளே நுகர்வோரின் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது வழக்கமான நீண்ட விநியோகச் சங்கிலிகள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற சவால்களைத் தவிர்க்க உதவும்.
ஐ.டி.சி நிறுவனம், தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை, விநியோகச் சங்கிலி செயல்திறன்களைப் பயன்படுத்தி, புதிய மூலப்பொருட்களைப் பெறுதல், உடனடி தயாரிப்பு, விரைவான விநியோகம் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது.
இருப்பினும், சில ஆய்வாளர்கள், உடனடி வர்த்தக தளங்களை மட்டுமே சார்ந்து இருப்பது பெரிய அளவில் சந்தை விரிவாக்கத்திற்கு உதவாது என எச்சரிக்கின்றனர். குறைந்த ஆயுட்கால தயாரிப்புகளுக்கு நவீன வர்த்தக சில்லறை விற்பனை கடைகள், பொது வர்த்தக கடைகள் போன்ற பெரிய விநியோக வழிகள் தேவைப்படும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
ஐ.டி.சி-யின் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பிரிவு, கடந்த நிதி ஆண்டில் ₹18,270 கோடி மொத்த விற்பனையைப் பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டை விட 6% அதிகம். பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ போன்ற உடனடி வர்த்தக தளங்கள், சில மணி நேரங்களில் புதிய பொருட்களை வழங்குவதன் மூலம் உள்ளூர் பேக்கரிகள், டி2சி (D2C) நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக உள்ளன.
இதேபோல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரிகோ போன்ற பெரிய நிறுவனங்களும் உடனடி வர்த்தகத்துக்கென தனி விற்பனை குழுக்களை உருவாக்கி வருகின்றன.
