டாடா அறக்கட்டளைகளில் உள்ள அறங்காவலர்கள் மத்தியில் பிளவு
டாடா குழுமத்தின் தாய்க்கம்பெனியான டாடா சன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, டாடா அறக்கட்டளைகளில் உள்ள அறங்காவலர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அறக்கட்டளைகள் சார்பில் டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டவர்களை மீண்டும் நியமிப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இந்த பிளவை வெளிப்படுத்தியுள்ளது.
டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் நடந்த கூட்டத்தில், அறக்கட்டளைகள் சார்பில் டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநராக உள்ள விஜய் சிங்கை மீண்டும் நியமிப்பது குறித்துப் பலத்த விவாதம் நடந்தது. அப்போது, மெஹ்லி மிஸ்திரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கீர் ஜஹாங்கீர், டேரியஸ் காம்பட்டா ஆகிய நான்கு அறங்காவலர்கள், விஜய் சிங்கை மீண்டும் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, விஜய் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாடு டாடா அறக்கட்டளையின் கைகளில் உள்ளது. டாடா அறக்கட்டளைக்கு, டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரம், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அக்டோபர் 2024-ல் டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டபோது, ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 75 வயதை அடையும் அறக்கட்டளையின் இயக்குநர்கள், டாடா சன்ஸ் குழுமத்தில் தொடர்ந்து பணியாற்ற ஒவ்வொரு ஆண்டும் மறுநியமனம் பெற வேண்டும். 77 வயதான விஜய் சிங், இந்த விதியின் கீழ் வந்தார்.
விஜய் சிங்கை மீண்டும் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த நான்கு அறங்காவலர்கள், அவர்களில் ஒருவரான மெஹ்லி மிஸ்திரியை இயக்குநராக நியமிக்க முயன்றனர். ஆனால், இதை நோயல் டாடா மற்றும் வேணு சீனிவாசன் ஆகியோர் எதிர்த்தனர். எந்தவொரு முடிவும் டாடா நிறுவனத்தின் மதிப்புகளுக்கு ஏற்ப முறையான வழிமுறைகளின்படி எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக இல்லாத அறங்காவலர்களுக்கு, குழுமக் கூட்டங்களில் இருந்து வரும் தகவல்கள் போதிய அளவில் இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. அதேசமயம், இயக்குநர்களாக இருப்பவர்கள், வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அனைவரிடமும் பகிர முடியாது என்று கூறுகின்றனர். இது, கடந்த சில மாதங்களாக அவர்களுக்குள் உரசல் ஏற்படுத்தி வருகிறது.
