டாடா மோட்டார்ஸுக்கு உதவும் பிரிட்டன் அரசு..
டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவருக்கு பிரிட்டன் அரசு 150 கோடி பவுண்ட் கடன் உத்தரவாதத்தை உறுதியளித்துள்ளது. பிரிட்டனில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி நிறுவனத்தின் கம்யூட்டர்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஏராளமான சப்பளையர்கள் கொண்ட அதன் விநியோகச் சங்கிலிக்கு உதவ, ஜாகுவார் லேண்ட் ரோவருக்கு பிரிட்டன் அரசு 150 கோடி பவுண்டுகள் ($200 கோடி) கடன் உத்தரவாதத்தை வழங்கும் என்று அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதலினால் ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழிற்சாலைகளில் சுமார் ஒரு மாதமாக உற்பத்தி நிறுத்தம் நடந்தது. சில சிறிய சப்ளையர்கள் தங்களிடம் இன்னும் ஒரு வாரத்திற்கான ரொக்கம் மட்டும் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான இந்த கார் நிறுவனத்திற்கு, ஒரு நாளைக்கு சுமார் 1,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மூன்று தொழிற்சாலைகள் பிரிட்டனில் உள்ளன. இவற்றின் மூலம் பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காம் மற்றும் வடக்கு நகரமான லிவர்பூலைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
வெள்ளி அன்று நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், சில நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தைக் குறைப்பது அல்லது பணிநீக்கம் செய்வதாக தெரிய வந்துள்ளது.
இந்த சைபர் தாக்குதல் “ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் பிராண்டின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, உலகின் முன்னணி வாகனத் துறையின் மீதான தாக்குதல்” என்று பிரிட்டனின் வணிக அமைச்சர் பீட்டர் கைல் குறிப்பிட்டுள்ளார். “இந்த கடன் உத்தரவாதம் விநியோகச் சங்கிலியை ஆதரிக்கவும், வேலைகளைப் பாதுகாக்கவும் உதவும்” என்று அவர் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட உள்ள இந்த கடன் தொகைக்கு
பிரிட்டனின் ஏற்றுமதி கடன் நிறுவனமான யுகே எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் உத்தரவாதம் அளிக்கும் என்று பிரிட்டனின் வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
