புகையிலை நிறுவனங்களுக்கு சிக்கல்
புகையிலைப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வு ஐ.டி.சி, புகையிலை நிறுவனங்களை பாதிக்கும்
புகையிலைப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை அரசு 40% ஆக உயர்த்தினால், ஐ.டி.சி உள்ளிட்ட சிகரெட் தயாரிப்பாளர்கள் கடுமையான விற்பனை சரிவை சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது புகையிலைப் பொருட்களுக்கு 28% அடிப்படை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டாலும், பிற வரிகளுடன் சேர்த்து மொத்த வரிச்சுமை சில்லறை விலையில் 55% ஆக உள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, 40% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால், ஐ.டி.சி மீதான மொத்த வரிச்சுமை 9-10% அதிகரிக்கும். இது சிறிய நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும். ஆனந்த் ரதி நிறுவனத்தின் ஆய்வாளர் அஜய் தாக்கூர், “இரட்டை இலக்க வரி உயர்வு, நுகர்வில் 4-5% பாதிப்பை ஏற்படுத்தலாம்” என எச்சரித்தார்.
2017-ல் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஐ.டி.சி.-யின் சிகரெட் விற்பனை மூன்று காலாண்டுகளுக்கு எதிர்மறை வளர்ச்சியைச் சந்தித்தது. கோவிட்-19 ஊரடங்கின்போதும் இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஆரோக்கியமான விற்பனை வளர்ச்சியைக் காட்டி வரும் ஐ.டி.சி., வரி திடீரென அதிகரிக்கும்போது, விற்பனை எப்படி பாதிக்கப்படும் என்பதை வரலாறு காட்டுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது சிகரெட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. 5-36% செஸ் வரி, ஒரு சிகரெட்டுக்கு ₹2.1 முதல் ₹4.2 வரையிலான குறிப்பிட்ட வரி என பல அடுக்கு வரி விதிப்புகள் உள்ளன.
அரசு, செஸ் வரியை ஜி.எஸ்.டி. -யுடன் இணைத்து, 40% ஜி.எஸ்.டி. வரியாக மாற்றினால், மொத்த வரிச்சுமை குறையக்கூடும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. ஆனாலும், பெரும்பாலான ஆய்வாளர்கள், வரிச்சுமை அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த வரி உயர்வால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், ஐ.டி.சி., காட்ஃப்ரே பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் சிறப்பாகத் தாக்குப்பிடிக்கும் எனத் தெரிகிறது.
