TSMC,சீனாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த முடிவு
உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான தைவான் செமிகண்டக்டர் மெனுஃபாக்சரிங் கம்பனி (டி.எஸ்.எம்.சி.), தனது மேம்பட்ட 2 நானோமீட்டர் (nm) சிப் உற்பத்தி நிலையங்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.
நிக்கெய் ஏஷியா தெரிவித்ததுபோல், இது அமெரிக்காவின் Chip EQUIP Act எனும் சட்ட முன்மொழிவுடன் தொடர்புடையதாகும்.
இம்முயற்சி, அமெரிக்க சலுகைகள் பெறுவதற்கான தகுதியை பாதுகாக்கவும், சீனாவைச் சார்ந்த ஒழுங்குமுறை ஆபத்துகளை குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டி.எஸ்.எம்.சி. இன் 2 nm உற்பத்தி வரிசைகள் இந்தாண்டின் இறுதியில் ஹின்சு, காஓஷியூங் ஆகிய தைவான் நகரங்களில் வணிக உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. மேலும், அமெரிக்காவின் அரிசோனாவில் புதிய தொழிற்சாலை கட்டப்படுகின்றது; இது விரைவில் மேம்பட்ட சிப் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதற்கு முன்பு, 3 nm தொழில்நுட்பம் உள்ளிட்ட உற்பத்தியில், டி.எஸ்.எம்.சி. சீன நிறுவனங்களான AMEC, Mattson Technology போன்றவற்றின் உபகரணங்களை பயன்படுத்தியது.
2024 இல் முன்மொழியப்பட்ட Chip EQUIP Act, அமெரிக்க அரசின் நிதி உதவிகள் அல்லது வரிச்சலுகைகள் பெறும் நிறுவனங்கள் “அச்சுறுத்தலான வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து” உபகரணங்களை வாங்குவதைத் தடுக்க முனைவதாகும். இது சீன உற்பத்தியாளர்களை குறிக்கிறது என பரவலாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், டி.எஸ்.எம்.சி. தைவான், அமெரிக்க உற்பத்திக்கான வேதிப்பொருட்கள், மூலப்பொருட்களையும் சீனாவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் மதிப்பாய்வு செய்து வருகிறது.
ஆனால், சீன உற்பத்தி நிலையங்களுக்கு, பீஜிங்கின் உள்நாட்டு தொழில் கொள்கைகளுக்கு ஏற்ப அங்குள்ள சப்ளையர்களிடமிருந்து பெறுவதைத் தொடரும்.
இந்நிலையில், அமெரிக்கா–சீனா வர்த்தக உறவுகள் பாதிப்படைந்துள்ளன. அதிகபட்சம் 145% வரி விதிக்கப்பட்ட நிலையில், மே 2025 இல் இரு தரப்பும் 90 நாட்கள் தற்காலிக சமரச ஒப்பந்தம் செய்தன. இதன்படி, அமெரிக்க வரிகள் 30% ஆகவும், சீனாவின் 10% ஆகவும் குறைக்கப்பட்டன; இவ்வமைப்பு நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்பட்டது.
சீன உபகரணங்களை தவிர்ப்பதன் மூலம், டி.எஸ்.எம்.சி. தனது சப்ளை செயினை பன்முகப்படுத்தி, அமெரிக்க சலுகைகளுக்கான தகுதியை உறுதிப்படுத்தி, அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு தயாராகிறது.
டி.எஸ்.எம்.சி. தலைவர் சி.சி. வேய் கூறுகையில், அரிசோனா தொழிற்சாலை விரைவில் நிறைவடைந்து, எதிர்காலத்தில் அமெரிக்கா 2 nm மற்றும் அதற்கு குறைந்த அளவிலான சிப் உற்பத்தியின் 30% அளவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
