முதலீட்டாளர்கள் கடன் வாங்க காரணம் என்ன?
கடந்த ஆண்டு பெரும் விலை சரிவுகளை எதிர்கொண்ட சில இந்திய புளூ சிப் நிறுவனங்களின் பங்குகளை, சில்லரை முதலீட்டாளர்கள் கடன் வாங்கி, தொடர்ந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
பங்கு சந்தை தரகர்கள் இவர்களுக்கு மார்ஜின் டிரேடிங் வசதி (MTF) மூலம் தொடர்ந்து கடன்களை அளித்து வருகின்றனர்.
MTF என்பது ஒரு முதலீட்டாளர் தனது சொந்த பணத்தை ஓரளவு பயன்படுத்தியும், ஓரளவு ஒரு தரகரிடமிருந்து கடன் வாங்கியும் பங்குகளை வாங்கும் ஒரு ஏற்பாட்டைக் குறிக்கிறது.
MTF திட்டத்தில், மதிப்பு அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள பங்குகளில் நான்கு பங்குகளின் மதிப்பு கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை கடந்த ஒரு ஆண்டில் முறையே 13%, 31%, 22% மற்றும் 3% சரிந்துள்ளதாக தேசிய பங்குச் சந்தை தரவு காட்டுகிறது.
இந்த வரிசையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்கு விதிவிலக்காக உள்ளது. அதன் பங்குகள் 13% உயர்ந்துள்ளன.
இதற்கிடையில் தேசிய பங்கு சந்தையான NSE இன் மொத்த MTF புத்தகம், ஏப்ரல் 7 அன்று ₹68,004 கோடியிலிருந்து அக்டோபர் 1-ல் ₹99,000 கோடியாக உயர்ந்தது. அதே கால கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கட்டவிழ்த்துவிட்ட உலகளாவிய வர்த்தகப் போரின் காரணமாக நிஃப்டி 50 3.4% சரிந்தது. கடந்த ஒரு ஆண்டில், இது 1.4% குறைந்துள்ளது.
நீண்ட காலமாக நஷ்டத்தில் இருக்கும் பங்குகளில் முதலீடு செய்ய மார்ஜின் கடன்களைப் பயன்படுத்துவது குறித்து சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“சமீப நாட்களில் பங்கு விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதன் காரணமாக மார்ஜின் தொகைகளை திருப்பி செலுத்த கோரும் அழைப்புகள் அதிகரித்திருக்கும். சரியாக செயல்படாத பங்குகளை அதிக அளவில் கொண்டுள்ள MTF தொகுப்பு நிலை தடுமாற வாய்ப்புள்ளது” என்று தரகு மற்றும் நிதிச் சேவைகள் தளமான மிரே அசெட் ஷேர்கானின் இணை துணைத் தலைவர் அங்கித் சோனி கூறியுள்ளார்.
