1 பிஸ்கட்டுக்கு 1 லட்சம் ரூபாய்…!!
ஐடிசி நிறுவனத்தின் பிஸ்கட்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு எப்போதும் உண்டு .இப்போது பிரச்னை அதுவல்ல.சென்னையைச் சேர்ந்த டில்லி பாபு என்பவர் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்காக சன்ஃபீஸ்ட் மாரி லைட்பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதில் 16 பிஸ்கட்டுகள் இருக்கும் என்று பிஸ்கட் பாக்கெட்டின் மீது எழுதியிருந்தது. ஆனால் உள்ளே 15 பிஸ்கட்டுகள்தான் இருந்தது. இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் கிடைக்காததால் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது,ஒரு நாளைக்கு 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயாராகி வரும் நிலையில் ஒரு நாளில் 29 லட்சம் பிஸ்கட்டுகளை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று டில்லிபாபு வாதிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஐடிசி தரப்பு, பாக்கெட்டில் 16 பிஸ்கட் என்று போட்டிருந்தாலும், எடையின் அடிப்படையில்தான் பிஸ்கட் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக கூறினர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, அப்படி ஒரு பாக்கெட்டின் எடை எவ்வளவு இருக்கும் என்று கேட்டார். அதற்கு ஐடிசி நிறுவனம் 76 கிராம் என்று பதில் அளித்தது. ஆனால் பாக்கெட்டை எடை போட்டால் 74 கிராம்தான் இருந்தது. இதற்கு என்ன பதில் தருகிறீர்கள் என்று கேட்ட நீதிபதி ஐடிசியை கண்டித்தார். மேலும் எடை 4கிராம் வரை கூடவோ குறையவோ சட்டத்தில் இடம் உள்ளதாக கூறிய ஐடிசி நிறுவனம், எப்படிப்பார்த்தாலும் இது மோசடிதான் என்று கூறி, டில்லிபாபுவின் தரப்புக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தர ஆணையிட்டனர்.மேலும் குறிப்பிட்ட பேட்ச் கொண்ட பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்கக்கூடாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.