10.3% சம்பள உயர்வு இருக்கும்:AON கணக்கெடுப்பு கூறுகிறது
இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் 10.3% இந்தாண்டு சம்பள உயர்வு சராசரியாக இருக்க வாய்ப்புள்ளதாக ஏஓஎன் அறிக்கை தெரிவிக்கிறது.கடந்த 2022-ல் 10.6%ஆக இருந்த சம்பள உயர்வு நடப்பாண்டு 10.3%ஆக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.ஆசியாவிலேயே இதுதான் அதிகம் என்றும் அந்த கணக்கெடுப்பு கூறுகிறது. உலகளவில் நிலவும் நிலையற்ற சூழல், அதிகப்படியான பணியாளர்கள் நிறுவனங்களில் இருந்து வெளியேறுவது ஆகிய காரணங்களால் பழைய ஊழியர்களை தக்க வைக்க இந்த சம்பள உயர்வு அளிக்கவேண்டியுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் அட்ரீஷன் எனப்படும், பணியாளர்களின் வெளியேறும் அளவு 21.4%ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ள aon அறிக்கை,திறமையான பணியாளர்களை தக்க வைக்க நிறுவனங்கள் பெரிய தொகையை செலவிடுவதாகவும் கூறியுள்ளது. இந்தியாவின் 40 வகையான தொழில்சாலைகளில் ஆயிரத்து 400 நிறுவனங்களில் இதுதொடர்பாக ஏஓஎன் நிறுவனம் கருத்துக்கணிப்பு மற்றும் கணக்கெடுப்பை நடத்தியது. இந்தியாவைப் போலவே பிரேசில் 7.2% வளர்ச்சியையும்,இந்தோனேசியா 6.7%, சீனா 6.3% வளர்ச்சியும் கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. உலகின் பல நாடுகளிலும் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 4 மடங்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும், குறைவாக வேலை செய்வோருக்கு ஒரு விழுக்காடு கூட சம்பள உயர்வு தரப்படுவதில்லை என்றும் அந்த நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. மின்வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அதிகபட்சம் 12.2%ஊதிய உயர்வு அளிக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கு அடுத்தபடியாக சேவைத் துறையில் 11.2% சம்பள உயர்வு இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.