புழுங்கல் அரிசிக்கும் 20% வரிவிதிப்பு…
இந்தியாவில் பருவம் தவறிய மழையால் உள்நாட்டில் உணவுப்பொருட்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து வருகிறது. உதாரணமாக ஏற்கனவே பாஸ்மதி இல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை, வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு 40% வரிவிதிப்பு என அடுத்தடுத்த அதிரடிகளை செய்து வருகிறது. இந்த சூழலில் புழுங்கல் அரிசிக்கும் 20 விழுக்காடு வரி விதிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு என்பது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தற்போதைய சூழலிலேயே அரிசி விலை என்பது உலகளவில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, புழுங்கல் அரிசிக்கு கூடுதல் வரிவிதிக்கப்பட்டால் அந்த விலையும் ,வெளிநாடுகளில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வாங்கும் அரிசியைவிட இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு கூடுதல் விலை வைக்கப்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 7.4 மில்லியன் புழுங்கல் அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40%ஆக இருக்கிறது. 2022ஆம் ஆண்டு ஏற்கனவே கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சர்க்கரை ஏற்றுமதிக்கும் விரைவில் தடை வர இருக்கிறது.