2025 டிவிடண்ட் பெரிதாக மாறாதாம்..
2025 நிதியாண்டில் மத்திய அரசுக்கு, ரிசர்வ் வங்கி அளிக்கும் டிவிடண்ட் அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், 2024-ல் இருந்த அளவோ,அதைவிட சற்று அதிகமாகவோ இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெறப்படும் டிவிடண்ட்2024-ல் இருந்ததை விடவும் தற்போது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அரசு வங்கிகளில் லாபம் அதிகரித்துள்ளது. 2024 நிதியாண்டில் முதல் 3 காலாண்டுகளில் 98,000 கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகளின் லாபம் உயர்ந்திருக்கிறது. 2024 நிதியாண்டில் இந்த லாபம் 1.3 டிரில்லியன் ரூபாயை விட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெறப்படும் டிவிடண்ட் அளவு 2025 நிதியாண்டில் 15,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக டிவிடண்ட்கள் குறித்த தரவுகளை மே மாத மத்தியில் ரிசர்வ் வங்கி வெளியிடும். 2024 நிதியாண்டில் 17 விழுக்காடு அதிக டிவிடண்ட்டாக அதாவது 48,000 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி , பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. கடந்த 2023 நிதியாண்டில் உபரி நிதியாக இருந்த 87,416 கோடி ரூபாயை அதே ஆண்டு மே மாதத்தில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கியது. கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 1.02 டிரில்லியன் ரூபாய் டிவிடண்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்த அளவை விட டிவிடண்ட் அதிகம் வரும் என்பதால் நிதி பற்றாக்குறை 2025 நிதியாண்டில் 5.1 விழுக்காடாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ள சூழலில் இந்தியாவில் பங்துச்சந்தைகளும் சாதகமாக உள்ளன. வரும் தேர்தல் முடிவுகள் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.