30 நாள்தான் கெடு..!!!
பொழுதுபோக்குத் துறையில் தனித்தனியாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களாக zeeமற்றும் சோனி ஆகியன திகழ்ந்து வருகின்றன. இவை இரண்டையும் இணைக்கும் பேச்சுவார்த்தை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 21 ஆம் தேதியான வியாழக்கிழமையில் இருந்து 30 நாட்கள் மட்டுமே இரு நிறுவனங்களும் இணைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த இணைப்பு மூலம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியிருக்கின்றது. 2021 முதல் இதற்கான பணிகள் நடந்து வந்தன. இணைப்புக்கு இரு தரப்பும் அவகாசம் கோரின. ஆனால் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் இணைய ஜீ நிறுவனம் மறுப்பதாக கூறப்படுகிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று குறிப்பிடாமல் இன்னும் கூட ஒரு முறை ஜி நிறுவனம் சோனியிடம் அவகாசம் கோரியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஜவ்வு போல இழுத்துக்கொண்டிருக்கும் இந்த டீல் எப்போது முடியும் என்பதை சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. புனித் கோயன்காவை தலைமை செயல் அதிகாரியாக நியமிப்பதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதே இந்த இழுபறிக்கு காரணமாக கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின்படி சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் மட்டுமே 50.86% பங்குகளை கூட்டு நிறுவனத்தில் வைத்துள்ளது. குறிப்பாக ஜீ நிறுவனத்தின் முதலாளிகளிடம் வெறும் 3.99%பங்குகள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதத் தொகை அனைத்தும் பொதுவெளியில் பங்குகளாக இருக்கும் என்று ஏற்கனவே டீலில் இரு தரப்பினரும் பேசியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.