33.61 லட்சம் கோடி வரி வசூலிக்க திட்டம்?
இந்தியாவில் நடப்புநிதியாண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 33.61 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை நிதியமைச்சகத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் உறுதி செய்திருக்கிறார். இந்தியாவில் இதுவரை நேரடி வரிகளாக 20விழுக்காடு வரி வசூல் உயர்ந்திருக்கிறது. இதேபோல் மறைமுக வரி 5விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இந்த நிதியாண்டின் 8 மாத தரவுகள் தெளிவாக உள்ளன. வழக்கமாக வரிகள் வசூல் என்பது எப்போதும் முதல் 6 மாதங்களில் நல்ல வகையில் இருக்கும். இதேதான் தற்போதும் தொடர்ந்திருக்கிறது. 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 33லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டைவிட 10.1விழுக்காடு அதிகமாகும். கடந்த நிதியாண்டில் மொத்தமாக வசூலிக்கப்பட்ட தொகை 30.54லட்சம் கோடி ரூபாயாகும். நேரடி வரிகளாக மட்டும் 18.23 லட்சம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் வசூலிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் வருமான வரி மற்றும் கார்பரேட் வரியும் அடங்கும். இதேபோல் மறைமுக வரியாக 15.38 லட்சம் கோடி ரூபாய் வசூலாக இருக்கிறதாம். இந்த மறைமுக வரி பிரிவில் ஜிஎஸ்டி, சுங்கம் மற்றும் கலால் வரிகள் அடங்கும்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகுறைப்பு ஏதேனும் இருக்குமா என்ற கேள்விக்கு, வாய்ப்பே இல்லை என்று பதில் அளித்திருக்கிறார் அந்த மத்திய அரசு ஊழியர்.
இந்தியா கச்சா எண்ணெய் 85% இறக்குமதி செய்கிறது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 76.40 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் கடைசியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. அதுவும் பெட்ரோல் மீது லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.