35 லட்சம் கல்யாணம்.. 4.25 லட்சம் கோடி பட்ஜெட்…
கல்யாணம் ஆயிரம் காலத்துப்பயிர், பலருக்கும் அது வாழ்வில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்பதால்,அதற்கு செலவு செய்ய இந்தியர்கள் தயங்குவதே கிடையாது. நடப்பாண்டு திருமணத்தை ஒட்டிய வணிகம் 4.25லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்கிறது புள்ளி விவரம். வரும் நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரை திருமண சீசன் தொடங்குகிறது. இதனை மையமாக வைத்து டெல்லியில் சிறப்பு விற்பனை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் டெல்லியில் மட்டுமே 3.5லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.இதனால் திருமணம் சார்ந்த வர்த்தகம் டெல்லியில் மட்டும் 1லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 32 லட்சம் திருமணங்கள் நடந்த நிலையில் , நடப்பாண்டு மேலும் 3 லட்சம் திருமணங்கள் அதிகம் நடக்க இருக்கின்றன. குத்துமதிப்பாக ஒரு திருமணத்துக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சம் திருமணங்களின் பட்ஜெட் 6 லட்சம் என்றும், 6 லட்சம் திருமணங்களின் பட்ஜெட் 25 லட்சம் ரூபாய் என்றும், 50ஆயிரம் கல்யாணங்களின் பட்ஜெட் 50 லட்சம் ரூபாயாகவும், எஞ்சிய 50ஆயிரம் திருமணங்களுக்கான செலவு 1 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த திருமண சீசன் ஜனவரி முதல் ஜூலை வரை இருப்பதாகவும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர். திருமண வீட்டாரின் செலவு 20விழுக்காடு மட்டும் என்று கூறியுள்ள வணிகர்கள்,இதர செலவுகள்தான் 80%என்றும் தெரிவித்துள்ளனர். மண்டபம், ஹோட்டல்கள்,பண்ணை வீடுகளுக்கான செலவுதான் அதிகமாம்.அலங்காரம், மலர்கள்,கேட்டரிங்,வாகனங்களின் செலவுகள்தான் அதிகமாம்.ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள்தான் அதிக வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.