தயாராகிறது 3-ஆம் கட்ட மானியம்..!!!
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு அண்மையில் FAME என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு மத்திய அரசே கொஞ்சம் பணம் கொடுத்து உதவும். முதல் கட்டமாக 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், 900 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கிடைத்த அமோக வரவேற்பை கண்ட மத்திய அரசு இதன் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் FAME -2 திட்டத்தின்படி 8 லட்சத்து 70 ஆயிரம் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் தரவுகளின்படி இந்தியாவில் 28.3 லட்சம் மின்சார வாகனங்கள் உள்ளன. இந்தியாவில் இதன் 3-ஆம் கட்டப்பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 50ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயாராகிவிட்டது.
தற்போது வரை பைக்,கார், ஆட்டோ உள்ளிட்டவைக்கு மட்டுமே மானியம் வழங்கப்பட்டு வரும் சூழலில் விரைவில்,சைக்கிள்கள், மின்சார டிரக்குகள், பஸ்களுக்கும் மானியம் வழங்கப்பட இருக்கிறது. 2030ஆண்டுக்குள் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க PLI எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. மின்சார பேட்டரிகள், கேத்தோடுகள்,செபரேட்டர்கள் இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.மின்சார பேட்டரிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் மறு சுழற்சி செய்யவும் அரசு திட்டம் தீட்டியிருக்கிறது. இந்த வரைவு அறிக்கை மீது நிதியமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் முடிவெடுக்க இருக்கிறது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.