50ஆயிரம் கோடி கூடுதல் செலவு…
விலையேற்றத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களுக்கு மானியம் வழங்குகின்றன. இந்த சூழலில் 50ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மானியம் நடப்பு நிதியாண்டில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உரம்,சமையல் எரிவாயு,உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தான் அதிக மானியம் தரப்பட்டுள்ளதாம். 24 நிதியாண்டின் மொத்த பட்ஜெட்டில் 45லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. இதில் மானியமாக மட்டுமே 4 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் சென்றுவிடும் என்று முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இது தற்போது 4.53லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது கடந்தாண்டுகளைவிட குறைவாகத்தான் இருக்கிறதாம். கடந்தாண்டு இதே மானியம் 5.62 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. உர மானியம்தான் மிக மிக அதிகமாக 25ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவை இழுத்துவிட்டுள்ளது. உரத்துக்கான மானியம் மட்டும் 1லட்சத்து 75ஆயிரத்து 100கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருள் மானியம் முறையே 15 மற்றும் 10ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறதாம். தேவையில்லாத மானியத்தை குறைத்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 23 நிதியாண்டில் உர மானியமாக 1லட்சத்து 5 ஆயிரம் கோடி திட்டமிடப்பட்டது.ஆனால் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக இது 2.54 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டதால் கூடுதலாக அரசுக்கு 2,257 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. 23 நிதியாண்டில் உணவுக்கான மானியம் 2.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இந்த மானியம் 1.97லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. இலவச உணவு தானியத்தை கொள்முதல் செய்வதற்கான செலவு மட்டும் 15,000 கோடி ரூபாய் கூடுதலாக இந்தாண்டு செலவாகியிருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.