753 கோடி வெறும் மிஸ்டேகாம்..
தமிழ்நாட்டில் ஒன்றல்ல இரண்டல்ல, 3 திடீர் கோடீஸ்வரர்கள் பட்டியல் தயாராகும் அளவுக்கு ஒரு பெரிய வேலை நடந்துவிட்டது. காரணம் முதன்முறையாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சாதாரண பொதுமக்கள் ஒருவரின் வங்கிக்கணக்கில் 9ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. பின்னர் இதேபோல் கோடக் மகிந்திரா வங்கியின் வாடிக்கையாளர் கணக்குக்கு 756 கோடி ரூபாய் வந்ததாக மெசேஜ் வந்தது. பின்னர் 3 ஆவது முறையாக கோடக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு 753 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்தது. யுபிஐ பரிவர்த்தனை செய்து அதற்கான பரிவர்த்தனை மெசேஜ்கள் எஸ்எம்எஸ் வழியாக அனுப்பும்போது பிழை நேரிட்டதே இந்த குழப்பத்துக்கு காரணம் என்று கோடக் மகேந்திரா வங்கி அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட நபரின் வங்கிக்கணக்கு முடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள கோடக் மகேந்திரா வங்கி,குறிப்பிட்ட வாடிக்கையாளரிடம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், பிரச்னையை சரிசெய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்குகளில் இது போன்ற தவறுகள் அடிக்கடி நடைபெற்று வருவதால் வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். மெத்தப்படித்த மேதாவிகளே இப்படி செய்து சாதாரண மக்களை இப்படி மோசடி செய்யலாமா என்றும் சாதாரண பாமர மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எஸ்எம்எஸ்ஸில் வந்த பிரச்னை சரி செய்யப்பட்டுவிடும் என்று கூறியுள்ள வங்கி நிர்வாகம், விரைவில் இந்த பிரச்னையை தேசிய பேமண்ட் கார்பரேஷன் வரை கொண்டு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ச்சே நமக்கெல்லாம் இப்படி மெசேஜ் வரலயே என்று புலம்பியவர்களுக்கு இது வெறும் தொழில்நுட்பக் கோளாறுதான் என்று கூறி வாயை அடைத்துள்ளது வங்கி நிர்வாகம்.