மறுபடியும் ஒரு 2008 ஆ!!!!
நம்மூர்களில் கோயம்புத்தூர்,திருப்பூர்,சிவகாசி போல சுறுசுறுப்புக்கும் வைர வியாபாரத்துக்கும் பெயர் பெற்றது குஜராத் மாநிலம் சூரத் நகரம். மேற்கத்திய நாடுகளில் தற்போது பட்டை தீட்டிய வைரங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாத சூழல் நிலவுகிறது.சீனாவில் இருந்தும் கிடைக்கும் அதிகப்படியான ஆர்டர்கள் கடந்த மாதம் கிடைக்காமல் போயுள்ளது.
உலகில் விற்கப்படும் 80% வைரங்கள் சூரத்தில் இருந்து தான் பாலிஷ் செய்து அனுப்பப்படுகிறது. சூரத் நகரில் வைரம் சார்ந்த தொழில்களில் மட்டும் 8 லட்சம் பேர் வேலைகளை செய்து வருகின்றனர். 4 ஆயிரம் பேரிடம் இந்த 8 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைக்காத காரணத்தினால் தற்போது 70 விழுக்காடு அளவுக்கே பணிகள் நடைபெற்று வருகின்றன. 2008-ம் ஆண்டு நிலவிய பொருளாதார மந்தநிலையைப் போலவே தற்போதும் சூழல் உள்ளதாக வைர ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வேலை இல்லாத நாட்களில் பணியாளர்களுக்கு தங்களால் பணம் தரக்கூட முடியவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு ஏப்ரலில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் அதற்கு முந்தயை ஆண்டைவிட 5.43% குறைவான அளவில் வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா,சைனா ஆகிய நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குறைந்ததும், ரஷ்யா உக்ரைன் போர் நிற்காததாலும் நிலைமை இன்னும் சிக்கலாகியுள்ளது. இதனால் சூரத்தில் சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.