கார் நிறுவனம் செய்ய உள்ள பெரிய முதலீடு!!!
தென்கொரியாவைச்சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹியூண்டாய் தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 2.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், டிவிஎஸ், அசோக் லேலண்ட், ஹியூண்டாய் என பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை அமைத்துள்ளன. இந்த நிலையில் ஹியூண்டாய் நிறுவனம் தனது புதிய மாடல் மின்சார கார்களை சென்னை அருகே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் மின்சார கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.வெறும் கார்கள் மட்டுமில்லாமல் 500க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்களையும் தமிழ்நாட்டில் ஹியூண்டாய் நிறுவனம் நிறுவ திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. உள்ளூர் சந்தையில் கிடைக்கும் பொருட்களை வைத்து மின்சார கார்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும் வெளிநாட்டு கார்கள் இறக்குமதிக்கும் அதிக வரி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு தரவுகளின்படி இந்தியாவில் மின்சார கார்களின் அளவு என்பது 1விழுக்காடுக்கும் குறைவாகவே உள்ளது. மேலும் 2030ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 30விழுக்காடாக அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பயணிகள் வாகனங்கள் உற்பத்தியில் மாருதி சுசுக்கி முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் ஹியூண்டாயும் இருக்கின்றன,அது மட்டுமின்றி, நிசான் நிறுவனம் தனது புதிய மின்சார கார்களை சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 600 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை நிசான் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. பிரபல நிறுவனங்கள் அடுத்தடுத்து மின்சார கார்களை தயாரித்து வருவதால் அதன் விற்பனையும் அதிகரிக்கிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதால் செலவும் குறைகிறது. இந்த காரணிகளால் இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசு குறைபாடு, எரிபொருள் விலையேற்றத்தை சமாளிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. மின்சார வாகனங்களை மக்கள் பரவலாக பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.