பிரபல ஐடி நிறுவனத்தில் லஞ்சம்?
இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களுக்கு போட்டியான நிறுவனம் காக்னிசன்ட், இந்த நிறுவனத்துக்கு பெரும்பாலான பணியாளர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். இந்த நிறுவனத்தில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரமாக உள்ளது. இதேபோல் இந்தியாவில் மட்டும் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். இந்த நிறுவனம் அண்மையில் லஞ்சம் கொடுத்ததாக புகாரில் சிக்கி தற்போது விசாரணைக்கு ஆளாகியுள்ளது. எல் அண்ட் டி மற்றும் அமெரிக்க ஒப்பந்த நிறுவனமான டீ நெக் ஆகிய நிறுவனங்களிடமும் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் புனே அலுவலகங்களில் லஞ்சம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 2013-14-ல் எல்அண்டி நிறுவனம் சார்பில் காக்னிசண்ட் நிறுவனம் அரசு அதிகாரிகளுக்கு புனேவில் 77 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தந்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் 2016-ல் நடந்த தணிக்கையில் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஏப்ரல் 19 ஆம் தேதி மகாராஷ்டிரா ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த புனே செஷன்ஸ் கோர்ட் ஆணையிட்டது. முன்னாள் துணைத்தலைவர் மணிகண்டன் ராமமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபாணியில் சென்னை வளாகத்திலும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் தலைவர் Coburn மற்றும் மூத்த சட்ட அலுவலர் Steven Schwartz ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய நபராக கூறப்படும் ஸ்ரீமணிகண்டன் ராமமூர்த்தியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் அவரால் அமெரிக்காவில் நடக்கும் வழக்குகளை சந்திக்க முடியவில்லை. அரசு அதிகாரிகளுக்கும் காக்னிசண்ட் நிறுவனத்துக்கும் இடையே எல்அண்ட் டி நிறுவன ஊழியர்கள் இடைத்தரகள்காக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பணம் கொடுத்ததில் கோபர்னுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இது தொடர்பான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கும் இடைவிடாமல் நடத்தப்பட்டு வருகிறது.