கருத்து சொல்லி விமர்சனங்களுக்கு ஆளாகும் பிரபலம்..
மனதில் பட்ட கருத்துகளை தெளிவாகவும், தீர்க்கமாகவும் பேசி இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமானவர் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். இவர் அண்மையில் இந்தியா வல்லரசு நாடு என்பது தொடர்பாக கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மகாத்மா காந்தி விரும்பியதைப்போல நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார். இந்தியா வல்லரசு ஆனதா இல்லையா என்பதைப்பற்றி தனக்கு கவலை இல்லை என்றும் பேசினார். உடனே,எப்படி மகாத்மா காந்தியை பற்றி மட்டும் பேசுவீர்கள் என்று சிலர் அவரை கடுமையாக விமர்சித்தனர். வல்லரசு நாடு என்பது, ஒரு நாட்டின் குடிமக்களுக்கு மிகக்குறைவான வறுமை, உயர்ந்த வாழ்க்கைத் தரம், மக்கள் மகிழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய அம்சங்களாகும். ரகுராம் ராஜன் மிக நல்ல நோக்கிலேயே பேசி இருந்தாலும் ஏன் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியெல்லாம் பேசவில்லை என்று ஒரு குழுவினர் ரகுராம் ராஜனை விமர்சித்தனர். அண்மையில் மத்திய இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் வெளியிட்ட செல்போன்கள் தொடர்பான புள்ளிவிவரத்தை விமர்சித்து 8 பக்க அறிக்கை வெளியிட்ட ரகுராம் ராஜன் அப்போதில் இருந்தே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.