ஐபோனுக்கு போட்டியாக மிரள வைக்கும் சீன தயாரிப்பு..
செமி கண்டக்டர் எனப்படும் அரைக்கடத்திகளுக்கான் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம்தான் அதிகம் இருக்கிறது. எனினும் உற்பத்தியில் சீனாதான் கிங். இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான ஐபோன் 15-ன் விற்பனை சீனாவில் மிக மந்தமாக நடந்துள்ளது ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. ஐபோன் 15 அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் சீனாவில் கடந்தாண்டு அதற்கு போட்டியாக ஹூவாவே நிறுவனம் தனது மேட் 60 என்ற மாடலை அறிமுகம் செய்தது. சீனாவில் கடந்தாண்டு முதல் காலாண்டில் 19.7 விழுக்காடாக இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை தற்போது 15.7 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இந்த பரபரப்பே அடங்குவதற்குள் ஹூவாவே அதி நவீன புரா 70 சீரிஸ் என்ற அதிவேக தொழில்நுட்பம் கொண்ட செல்போனை களமிறக்கியுள்ளது. செமிகண்டக்டர் நுட்பங்களை தயாரிக்க சீனா மீது அமெரிக்கா தடை விதிக்கப்பட்ட நிலையில் மேட் 60, புரா 70 ஆகிய இரு தயாரிப்புகளை ஹுவாவே அளித்திருக்கிறது. இதே நேரம் ஆப்பிளுக்கு போட்டியாக பிற சீன நிறுவனங்களான ஓப்போ, விவோ, ஷியோமி ஆகிய நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை வெளியிட்டு ஆப்பிளுக்கு ஆப்படித்திருக்கின்றனர். மேட் 60 புரோ ரக செல்போன்களில் 7 நேனோமீட்டர் அளவுள்ள சிப்களை புகுத்தியது அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையே மிரளவைத்திருக்கிறது. இந்த வகை சிப்பை அமெரிக்கா மட்டுமே தயாரித்து வந்தது. அமெரிக்க தடையை மீறி சீன செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான SMIC சீன செல்போன் நிறுவனத்துக்கு சிப் நுட்பத்தை விற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. உலகத்திலேயே அதிகபட்சமாக 164.7 பில்லியன் யுவான் அதாவது 22.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ஹூவாவே நிறுவனம் இறக்கியுள்ளது. இதன் பலனாகவே அதிநவீன சிப்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய ஐபோன் சந்தையாக கருதப்படும் சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு சரிந்து வருவது அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது.