மருந்து நிறுவனத்தை வாங்கும் பிரபல நிறுவனம்..
சிப்லா என்ற மருந்து நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த இந்திய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை வாங்க டோரண்ட் பார்மாநிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக சிவிசி நிறுவனத்துடன் டோரண்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன் மூலம் 1.25 பில்லியன் முதல் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முதலீடுகளை கடனாக வாங்க டோரண்ட் நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. ஏற்கனவே பெயின் கேபிடல் என்ற நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கும் சூழலில் புதிய பேச்சுவார்த்தை இன்னும் அதிக முதலீடுகளை பெறும் என்று கூறப்படுகிறது. சுதீர்,சமீர் மேத்தா ஆகியோர் இணைந்து டோரண்ட் என்ற நிறுவனத்தினை உருவாக்கியுள்ளனர்.புரூக்ஃபீல்ட் என்ற நிறுவனத்துடன் 1.2 பில்லியன் கடன் வாங்கவும் டோரண்ட் நிறுவனம் பேசி வருகிறது. சிவிசி மற்றும் புரூக்ஃபீல்ட் நிறுவனங்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றி பெறும்பட்சத்தில் 2.5பில்லியன் டாலர்கள் கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி,பார்கிளேஸ்,சிட்டி மற்றும் மார்கன் ஸ்டான்லி ஆகிய நிறுவனங்களும் டோரண்ட் உடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றன.
10 முதல் 20ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கவும் டோரண்ட் திட்டமிட்டு இருக்கிறது. டோரண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 63,289 கோடி ரூபாயாக இருக்கிறது. சிவிசி நிறுவனம் ஏற்கனவே கால்பந்து, ஐபிஎல் அணியான குஜராத் டைடன்ஸ் அணியில் குறிப்பிடத்தகுந்த பங்குகளை வைத்திருக்கிறது. சிப்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாயை கடந்திருக்கிறது.இதில் 59,236 கோடி ரூபாயை டோரண்ட் அளிக்கும்பட்சத்தில் சிப்லாவை வாங்கும் பணிகள் முடியும். 88ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சிப்லா நிறுவனத்தில்,டோரண்ட் நிறுவனம் கால்பதிக்கும்பட்சத்தில் 59.74பங்குகள் டோரண்ட்டுக்கு சென்றுவிடும்.