ஜியோவுக்கு கடன் தரும் பிரபல நிறுவனம்…
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக ஜியோ திகழ்கிறது.இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வெளியே கடன் வாங்க திட்டமிட்டது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பெற திட்டமிட்ட நிலையில் அதற்கு பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றன. 16ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனாக ஜியோ நிறுவனம் பெற இருக்கிறது. இதற்காக Bnp paribas நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. அவர்கள் கடன் தர சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனத்திடம் இருந்து 5 ஜி நெட்வொர்க் உபகரணங்களை வாங்க இந்த தொகை செலவிடப்பட இருக்கிறது. இந்த கடன்கள் 9 மாதங்களுக்குள் ஜியோ நிறுவனம் திரும்ப செலுத்தும் வகையில் பணிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படிப் பார்த்தாலும் கடன் கடன்தானே என்பார்கள் அதேபாணியில் இந்த குறுகிய கால செலவுக்கு குறிப்பிட்ட வட்டியும் வசூலிக்கப்பட இருக்கிறது. இதற்காக பெரிய தொகை காப்பீட்டுத் தொகையாகவும் செலுத்தப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கும் அளவும் அதிகரித்துள்ளது ஜியோவின் கடன் சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது. 5ஜி சேவையை சோதனை முறையில் அமல்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம்,மேலும் உபகரணங்களை வாங்க நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்களை நாடியுள்ளது. இதற்காக பல்வேறு கட்டங்களில் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கடந்தமாதமே தகவல் வெளியாகியிருந்தது. 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள முதலீடுகளை செய்வதாக ஜியோ ஏற்கனவே அறிவித்துள்ளது.இதுவரை ஜியோவில் 6,260 நகரங்கள் 5ஜி சேவையால் இணைக்கப்பட்டுள்ளது.