ஷாப்பிங் மால்களில் ஃபுட் கோர்ட் அமைக்கும் பிரபல நிறுவனம்..
இந்தியாவில் கேஎப்சி, பிட்சா ஹட்,கோஸ்டா காஃபி உள்ளிட்ட கடைகளை இயக்கும் நிறுவனம் தேவ்யானி இண்டர்நேஷனல், இந்த நிறுவனமும் பிவிஆர் ஐநாக்சும் இணைந்து புதிய வணிகத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ஷாப்பிங் மால்களில் உணவு கடைகள் எனப்படும் ஃபுட் கோர்ட் அமைக்க இருக்கின்றனர். இந்த இரு நிறுவனங்களும் இணைந்து உணவு துறையில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் ஆர்ஜே கார்ப் நிறுவனத்தையும் தேவ்யானி இண்டர்நேஷனல் நிறுவனத்தையும் ஒன்றிணைத்தனர். தேவ்யானி நிறுவனம் 51 விழுக்காடு பங்குகளையும், பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 49 விழுக்காடு பங்குகளையும் புதிய வணிகத்தில் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது., ஒரே நேரத்தில் சினிமா மற்றும் உணவுத்துறையை முன்னேற்றும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனம் மூலம் 15 கோடி பொதுமக்கள் பயனடைய முடியும். தேவ்யானி இண்டர்நேஷனல் நிறுவனம் கடந்தாண்டு மார்ச் வரையிலான காலாண்டில் 60 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்திருந்தது.இது இந்தாண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் 49 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. இதேபோல் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இந்தாண்டு மார்ச் வரையிலான காலாண்டில் நிகர நஷ்டம் 133 கோடி ரூபாயாக குறைந்திருப்பதாக அறிவித்துள்ளது. இதே நிறுவனம் கடந்தாண்டு மார்ச் காலகட்டத்தில் 333 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.