சுந்தர் பிச்சைக்கு ஊழியர்கள் எழுதிய மடல்
ஊர் உலகமே பொருளாதார மந்த நிலையில் உள்ளபோது தொழிலாளர்களை கண்ணியமாக நடத்தும்படி கூகுளின் தாய்நிறுவனமான ஆல்பபெட்டுக்கு அந்நிறுவன ஊழியர்கள் ஆயிரத்து 400 பேர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு தூக்கப்போவதாக கூகுள் நிறுவனம் கூறியிருக்கும் நிலையில் இந்த கடிதம் உலக தொழில்நுட்ப வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஆட்குறைப்பு நடவடிக்கை,புதிதாக ஆட்களை எடுப்பது நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆல்ஃபபெட் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு விதிகளுக்கு உட்பட்டு தங்கள் பணியாளர்களுக்கு சலுகைகளை குறைவின்றி செய்ய வேண்டும் என்று அந்த ஊழியர்கள் கோரியுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட உள்ள ஊழியர்களின் குரல்களை நிர்வாகம் கேட்கத் தவறிவிட்டதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு முதலீட்டாளர்கள் தரும் அழுத்தத்தை அடுத்து கூகள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். இந்த சூழலில் தங்கள் மனக்குமுறலை ஊழியர்கள் சிஇஓவுக்கு கடிதமாக எழுதியிருப்பது முதலீட்டாளர்களையே சற்று யோசிக்க வைத்திருக்கிறது.