ஆன்லைன் ஷாப்பிங்கில் புதிய அனுபவம் வரப்போகுது….
ஆன்லைன் ஷாப்பிங்கில், பணப் பரிவர்த்தனைகளின்போது பணம் இழப்பதை தடுக்கும் நோக்கில் அக்டோபர் 20ஆம் தேதி டோக்கன் திட்டத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் தொடங்கியிருக்கிறது. முதலில் டோக்கன் திட்டம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை 16 இலக்க கிரிடிட் அல்லது டெபிட் கார்டுகள் பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கு பதிலாக எந்த விவரமும் வெளியில் தெரியாத டோக்கன்கள் உருவாக்கப்படும். Card-on-File (CoF) tokens என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 16 இலக்க கார்டு எண்களுக்கு மாற்றாக டோக்கன்களை வருங்கால பயன்பாட்டுக்கு சேமித்து வைத்துக்கொள்ளவும் முடியும். இந்த புதிய திட்டத்தில் 16 இலக்க எண்களை வாடிக்கையாளர்கள் ஞாபகத்தில் வைக்க வேண்டிய அவசியம் இருக்காது, தேவை ஏற்படும்போது வெறும் சிவிவி எண்கள் மட்டுமே கூறும் வகையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த டோக்கன் சிஸ்டத்தை அனைத்து முன்னணி இ-காமர்ஸ் இணையதளங்களிலும் பயன்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இணைய வங்கிசேவை மூலமாகவே இதனை செய்யும் வகையில் ஏற்பாடுகளை ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. இதற்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதல் மிக அவசியமாக இருக்கிறது. டோக்கன் திட்டங்களுக்கு ஓடிபி எனப்படும் எண்கள் மிக அவசியமாகும். கார்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர் மெல்ல மெல்ல டோக்கன்கள் பக்கம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.