ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்த சோதனை..
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து 3 ஆவது காலாண்டாக செல்போன்கள் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மதிப்பு மிக்க நிறுவனமான ஆப்பிள், தனது வருவாய் இழப்பு குறித்த தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இருந்து தொடர் சரிவுகளை ஆப்பிள் சந்தித்து வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விலை 1.4விழுக்காடு சரிந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒரு நிலையற்ற நிலை காணப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிளின் செல்போன்கள்,கணினிகள், டேப்லெட்டுகளையும் விற்க முடியாமல் அந்நிறுவனம் சிக்கலை சந்தித்துள்ளது. ஜூன் மற்றும் செப்டம்பர் காலகட்டத்தில் உலகளவில் நிலவும் பொருளாதார நிலை காரணமாகவே ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை சரிந்துள்ளதாக ஆப்பிள் நிறுவன சிஎப்ஓ லூகா மேஸ்ட்ரி தெரிவித்துள்ளார். உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அழுத்தம் அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் விற்பனையை கடுமையாக பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே சந்தையில் ஐபோன் 14 மாடல்கள் சரியாக விற்பனையாகாத நிலையில் அடுத்த போனை அந்நிறுவனம் வெளியிட தயாராகி வருகிறது. புதிய மாடல் போன் சந்தைக்கு வந்தால் ஏற்கனவே இருப்பில் உள்ள பழையமாடல் போன்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மட்டுமின்றி சாம்சங் போன்ற பிரபல நிறுவனங்களும் தங்கள் விற்பனையில் சரிவு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தக நேர முடிவில் 2.2விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளன.