எல்லாம் யோசிச்சு தான் செய்திருக்கோம்!!!
எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளை மனதில் வைத்தே 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.பட்ஜெட் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர், சாதாரண மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு உதவும் நோக்கில்தான் பட்ஜெட் தயாரித்தோம் என்றார். இந்திய எல்லைக்கு வெளியில் உள்ள பிரச்னைகளை சமாளிக்கவும் ஏதுவாக வரவு செலவு திட்டம் வகுக்கப் பட்டுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார். கச்சா எண்ணெய் ,எரிபொருள் மற்றும் உரத்துறை விலை ஏற்றங்கள் சவாலானதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். 293வது சட்டப்பரிவின் மூலம் மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்க தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டும் பிரதமர் மோடியின் கனவு என்பது வெறும் நகைச்சுவயானது என்று பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் கூறயிருந்தார். இதனை சுட்டிக்காட்டி பேசிய நிர்மலா சீதாராமன்,பொறுப்புடன் பேசுங்கள் என்றும் பதில் அளித்துள்ளார்.மேலும் 2014-ல் தெலங்கானாவின் கடன் 60ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் தற்போது மாநிலத்தின் மொத்த கடன் 3 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும் நிதியமைச்சர் காட்டமாக பதில் அளித்துள்ளார்.