81.5 கோடி இந்தியர்களின் ஆதார் விவரங்கள் கசிவா?
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு ரீ செக்யூரிட்டி என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், இந்தியர்களின் ஆதார் குறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் 81.5 கோடி இந்தியர்களின் தனித்தரவுகள் டார்க் வெப் தளங்களில் கசிந்துள்ளதாக கூறியுள்ளது. ஆதார் மட்டுமின்றி,பாஸ்போர்ட்,விவரங்கள்,பெயர்,போன் நம்பர்,விவரங்கள் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஐசிஎம்ஆர் தளத்தில் இருந்து கசிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஐசிஎம்ஆர் அளித்த தகவலின் பேரில் சிபிஐ விசாரிக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. ‘pwn0001’ என்ற பெயரில் கடந்த 9 ஆம் தேதி இந்த கசிவு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியர்களின் 1 லட்சம் கோப்புகள் இதில் இடம்பிடித்திருப்பதாகவும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மொத்த ஆதார் விவரங்களையும் இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. கடந்தமாதம் ஜார்க்கண்டில் உள்ள ஆயுஷ் அமைச்சக தரவுகள் கசிந்ததாக கூறப்படுகிறது. இதில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரின் விவரங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளன. இந்தியர்களின் ஆதார் விவரங்கள்,மருத்துவ விவரங்கள் வெளிநாடுகளில் மலிவு விலைக்கு விற்கப்பட்டுள்ளது உலகளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.