85%வீழ்ச்சி கண்ட அதானி நிறுவனம்..

அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் சரமாரி குற்றச்சாட்டுகள் கூறி 9 மாதங்கள் கடந்துவிட்டன. எனினும் அதானி குழுமம் முழுமையாக பாதிப்பில் இருந்து மீளவில்லை. இந்த சூழலில் அதானி டோட்டல் கேஸ் என்ற முக்கிய நிறுவனத்தின் மதிப்பு, மொத்த மதிப்பில் இருந்து 85விழுக்காடு வரை சரிவை சந்தித்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளில் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.6%வரை சரிந்தன.திங்கட்கிழமை இதன் மதிப்பு 575 ரூபாயாக சரிந்தது. ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்கு முன்பு இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 3,891 ரூபாயாக இருந்தது. பெரும்பாலான அதானி குழும நிறுவனங்கள் ஓரளவு பாதிப்பில் இருந்து தப்பியிருந்தாலும் இந்த நிறுவனம் மட்டும் பெரிய பாதிப்பில் தொடர்கிறது.GQGஉள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெற்றிருந்த போதிலும் அதானி டோட்டல் நிறுவன பங்குகள் பெரிய சரிவை சந்தித்து வருகின்றன. டெல்லியில் மின்சார வாகனங்களாக அனைத்து வாகனங்களும் 2030ஆம் ஆண்டுக்குள் மாற்றப்படவேண்டும் என்ற முடிவு குறித்த தகவல் வெளியானதும் அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் பெரிய அடியை சந்தித்தன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 6%மதிப்பை அந்நிறுவனம் இழந்திருக்கிறது. கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பர்க் கூறிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதானி குழுமத்தின் மதிப்பு அமெரிக்க டாலர்களில் 150 பில்லியன் அளவுக்கு வீழ்ந்து விட்டது. ஆனால் எந்த தவறையும் செய்யவில்லை என்று அதானி குழுமம் தொடர்ந்து மறுத்து வருகிறது.உச்சநீதிமன்ற நிபுணர்கள் குழு அளித்த இடைக்கால அறிக்கையிலும் தவறாக பங்குகளை கணக்கிட்டதாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சந்தை மதிப்பு வீழ்ச்சி அதானியின் 7 ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றை ஆட்டம் காண வைத்திருக்கிறது.