விமான நிலையங்களை கைப்பற்ற அதானி குழுமத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு அளித்த அரசு!
அதானி குழுமத்திற்கு ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை கையகப்படுத்த மூன்று மாத கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மக்களவையில் (Lok Sabha) வியாழக்கிழமை தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்றைக் காரணமாகக் காட்டி ஏர்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆஃப் இந்தியாவிடமிருந்து (Airports Authority of India-AAI) 6 மாச கால அவகாசம் கேட்டிருக்கிறது அதானி குழுமம்.
ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படாத நிலையில், மங்களூரு, அகமதாபாத் மற்றும் லக்னோ விமான நிலையங்கள் முறையே அக்டோபர் 31, நவம்பர் 2 மற்றும் நவம்பர் 7 அன்று அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்று தெரிவித்தார் சிந்தியா.
அதானி குழுமத்திற்கு 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சிந்தியா அறிவித்தார். இந்த கால நீடிப்பால் AAI க்கு நஷ்டம் இல்லை என்று அவர் மேலும் அறிவித்தார். ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் செல்லும் வரை, அதன் வருவாய் AAI க்கு வரும் என்று சிந்தியா குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பை பன்னாட்டு விமான நிலையத்தைக் (Mumbai International Airport Ltd) கட்டுப்படுத்தும் உரிமையைப் பெற்ற அதானி குழுமம் நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய ஆப்பரேட்டராக மாறியது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையம் (CSMIA) டெல்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்த நாட்டின் இரண்டாவது பிஸியான ஏர்போர்ட்.
மதிப்பீட்டு நிறுவனமான இக்ராவின் (ICRA) மார்ச் மாத அறிக்கையின்படி, கோவிட் தொற்றைத் தொடர்ந்து பயணிகள் போக்குவரத்து குறைந்ததால், மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் விமான நிலையத் துறைக்கு, ₹5,400 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தத் துறைக்கு ₹3,500 ரொக்க இழப்பையும் அறிக்கை மதிப்பிடுகிறது. இருப்பினும், இந்த நிதியாண்டில் விமான நிலையத் துறை மீண்டும் லாபத்திற்குத் திரும்பும் என்று இக்ரா எதிர்பார்க்கிறது.