இலங்கையில் காத்த கூட காசா மாத்தும் அதானி…
இலங்கையின் முதலீட்டு வாரியம் அண்மையில் இந்திய நிறுவனம் ஒன்றின் முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அது எந்த நிறுவனம் என்று பார்த்தால் அது அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி என்ற பிரிவுதான்.
இந்த நிறுவனம் இலங்கையில் இரண்டு காற்றாலை மின்சார திட்டங்களை அமைக்க உள்ளது.அமெரிக்க டாலரில் 442 மில்லியன் டாலர் செலவில் இந்த காற்றாலைகள் அமைய இருக்கின்றன. ஒப்புதல் கிடைத்துவிட்டதை அடுத்து 350 மெகாவாட் மின் உற்பத்தியை அதானி குழுமம் அடுத்த 2 ஆண்டுகளில் துவங்க இருக்கிறது. உற்பத்தி செய்யும் மின்சாரம் அந்நாட்டு மத்திய மின்தொகுப்புக்கும் அளிக்கப்பட இருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் 125 பில்லியன் டாலர் மதிப்பு சரிந்த அதானி குழுமத்தில் கிரீன் எனர்ஜி என்ற பிரிவுதான் இத்தகைய புதிய முதலீட்டை அந்நாட்டில் செய்து வருகிறது. மின்வெட்டு, ஆற்றல் உற்பத்திக்கு பணம் இல்லை என்ற பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு காற்றாலை மின்சார உற்பத்தி நல்ல தீர்வாக அமையும் என்பதால் இந்த திட்டத்துக்கு இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டின் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க அந்நாட்டில் மின்சார கட்டணம் கடந்த வாரம் 66% உயர்த்தப்பட்டுள்ள நிலையில் , அதானி நிறுவனம் அங்கு கால்பதிக்கிறது. இதே அதானி குழுமம் இலங்கையில் 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள துறைமுக திட்டங்களுக்கும் பணிகளை செய்து வருகிறது. அதானி குழும காற்றாலை மின்சார உற்பத்தியால் மட்டும் இலங்கையில் ஆயிரத்து 500 முதல் 2ஆயிரம் பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.