தொடங்கியது ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி யின் புதிய பங்கு வெளியீடு!
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. இன்று தொடங்கி அக்டோபர் 1 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 3.88 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. 3.88 கோடி பங்குகளில் ஆதித்ய பிர்லா கேப்பிட்டலின் 28.51 லட்சம் பங்குகளும் சன் லைஃபின் 3.6 கோடி பங்குகளும் அடங்கும்.
இந்தப் பங்குகளின் விலை ₹695-712 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதிகபட்சமாக பங்குகளின் விற்பனை மூலம் ₹2,768.25 கோடியை ஆதித்ய பிர்லா திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆதித்ய பிர்லா இப்பொழுது 118 வகையான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது; ஜூன் காலாண்டு நிலவரப்படி ₹2.93 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி ஆனது ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் கனடாவின் சன் லைஃப் பைனான்சியல் இன்க் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். கோடக் மஹிந்திரா கேபிடல், போஃபா செக்யூரிட்டீஸ், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, ஆக்சிஸ் கேபிடல், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ், ஜேஎம் பைனான்சியல், மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அத்வைசர்ஸ், எஸ்.பி.ஐ கேபிடல் மார்க்கெட்ஸ் மற்றும் யெஸ் செக்யூரிட்டீஸ் (இந்தியா) இந்த ஐபிஓவிற்கு வணிக வங்கியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.