வாங்கி குவிக்கும் ஏர் இந்தியா!!!
எதையோ வைத்துக்கொண்டு திங்கவும் தெரியாமல்,பிறருக்கும் அளிக்க தெரியாத செல்லப் பிராணியைப்போல சில காலத்துக்கு முன்பு ஏர் இந்தியாவின் விமானங்களின் நிலை இருந்தது. ஆனால் டாடா சன்ஸ் குழுமம் ஏர் இந்தியாவை துணிந்து வாங்கிவிட்டு, பல புரட்சிகரமான பணிகளை முன்னெடுத்து வருகிறது. நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை லாபகரமாக்கும் முயற்சியில் டாடா குழுமம் அதிதீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொட கொடா பழைய விமானங்களை சீரமைக்கவும், புத்தம் புதிதாக விமானங்களை இறக்கவும் டாடா திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் டாடா குழுமம் இருவேறு ஆர்டர்களை செய்ய பணிகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் மொத்தமாக சேர்த்து 500 விமானங்களை களத்தில் இறக்கவும் டாடா குழுமம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 400 நேரோபாடி வகை விமானங்களும், 100 அகல பாடி வசதி கொண்ட விமானங்களையும் டாடா வாங்க இருக்கிறது. இதில் எத்தனை ஏர்பஸ் 350எஸ், எத்தனை போயிங் 787, 777 என்பது விரைவில் இறுதி செய்யப்பட இருக்கிறது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு 460 விமானங்களை வாங்கியதே சாதனையாக இருந்தது. இதனை டாடா நிறுவனம் தூக்கி சாப்பிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1932ம் ஆண்டு ஜே.ஆர்.டி டாடாவால் துவங்கப்பட்ட ஏர்இந்தியா விமான நிறுவனத்தை கடந்த 1953ம் ஆண்டு மத்திய அரசு அரசுடைமையாக்கியது. 2000 ம் ஆண்டு காலகட்டத்தில் ஏர்இந்தியாவின் செல்வாக்கு கடுமையாக சரிந்த நிலையில் முக்கால் நூற்றாண்டுக்கு பிறகு இழந்த பெருமையை டாடா மீண்டும் கைப்பற்றி, விமானங்களை உலகத்தரத்தில் இயக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.