போட்ட காசு திரும்ப வரல,ரேட் ஏத்த போகுது ஏர்டெல்…!!!
துவக்கத்தில் அட்டகாசமான சேவை அளித்து இந்தியாவின் முன்னணி சிம்கார்டு நிறுவனமாக வலம் வந்த ஏர்டெல் கடந்த சில மாதங்களாக மோசமான சேவை, சிக்னல் கிடைப்பதில்லை என்று பல வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிப்பதை காண முடிகிறது. இந்த சூழலில் ஏர்டெல் நிறுவன அதிகாரிகள் ஸ்பெயினில் உள்ள பார்செலோனாவில் ஒரு கண்காட்சியில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு போதுமான சந்தை மூலதனம் இருப்பதாகவும், நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். எனினும் போடும் முதலீடு மீண்டும் வருவாயாக கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக கூறியுள்ளனர். பெருந்தொகையை மூலதனமாக செய்துள்ளதாக கூறியுள்ள சுனில் பார்தி மிட்டல் , ஆனால் போட்ட முதலீடுகள் மீண்டும் குறைவாக வருவதால் நடப்பாண்டின் பாதியில், வாடிக்கையாளர்களிடம் இருந்து சந்தாவை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தரத்தை உயர்த்திவிட்டு பின்னர் பணத்தை உயர்த்துவது குறித்து யோசியுங்கள் என்று வாடிக்கையாளர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர்.