அதிக வாடிக்கையாளர்களைக் கவர, இணை ஒப்பந்த முறைகளைப் பின்பற்றும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் !
சறுக்கும் வோடஃபோன்-ஐடியா
இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோவும் பார்தி ஏர்டெல்லும், இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் வோடஃபோன்-ஐடியாவிடம் இருந்து மொபைல் அதிக கட்டணம் செலுத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கைப்பற்ற ஸ்மார்ட் மார்க்கெட்டிங் நகர்வுகளைத் துவங்கி இருக்கின்றன. அதேநேரத்தில் “வோடஃபோன்-ஐடியா” அதன் வலுவான போட்டியாளர்களுக்கு சந்தைப் பங்கைத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறது.
ஏர்டெல் + பெப்ஸிகோ
ஏர்டெல், பெப்ஸிகோ இந்தியாவுடனான முந்தைய இணை பிராண்டிங் ஒப்பந்தத்தை மீண்டும் துவங்குகிறது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனாளர்கள்; லேஸ், குர்குரே, அங்க்கிள் சிப்ஸ் மற்றும் டொரிட்டோஸ் போன்ற பெப்ஸிகோவின் தயாரிப்புகளை வாங்கும் போது இலவசமாக 2GB டேட்டா வரை பெற முடியும். ஏர்டெல் மற்றும் பெப்சிக்கோவின் இந்த திட்டம், மொபைல் பிராட்பேண்ட் நுகர்விலும், நொறுக்குத் தீனி நுகர்விலும் ஏற்பட்டு வரும் வலுவான கூட்டணி விற்பனையை பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கும், ஏனெனில் இந்தியா முழுதும் பெருநிறுவன ஊழியர்களில் பெரும்பகுதியினர் ஆன்லைனில் வேலை செய்கிறார்கள், அதேபோல மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக டேட்டா (DATA) பயன்பாடும் அதிகரித்திருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ + டிஸ்னி
இந்தச் சூழலில், ரிலையன்ஸ் ஜியோ நேற்று (செவ்வாய்க்கிழமை) புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பை வெளியிட்டது, இதில் ₹ 499-ல் துவங்கும் ஒரு தொகுப்பின் உள்ளடக்கமாக, அதன் கால வரம்பான 28 நாட்களுக்கு அளவற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 3GB டேட்டா மற்றும் 100 குறுஞ்செய்தி இதை தவிர ஓர் ஆண்டுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ ஆப்ஸ் மற்றும் இதர சலுகைகளை வழங்குகிறது. ஜியோவின் புதிய திட்டம் செப்டம்பர் 1 முதல் சந்தையில் ரீசார்ஜ் செய்வதற்குக் கிடைக்கும். இதில் உள்ள அனைத்து இலவசங்களும் மேலும் பயனரது டேட்டா தேவைகளை அதிகரிக்க தூண்டும் என்பது தனி கதை.
மார்க்கெட்டிங் உத்தி
ஏர்டெல் மற்றும் பெப்ஸிக்கோவின் இணை ஒப்பந்தமானது இந்த வாரத்தில் இருந்து இந்தியா முழுதும் துவங்கும், இது மார்ச் 31, 2022 வரை செல்லுபடியாகும்.
“டேட்டா ஒரு முக்கியமான பயன்பாட்டுக் கரன்சியாக மாறி இருக்கிறது, வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு, ஆன்லைன் கல்வி கற்பதற்கு, வீடியோக்களைப் பார்ப்பதற்கு மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு என்று பல வகைகளில் பயன்படுத்துகிறார்கள்.” என்று பெப்ஸிக்கோ-இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ஏர்டெல்லின் பிராண்ட் விளம்பரங்கள் லேஸ், குர்குரே, அங்கிள் சிப்ஸ் மற்றும் டொரிட்டாஸ் பேக்குகளில் பொறிக்கப்படும், பெப்சிக்கோவின் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் ஏர்டெல் பிராண்ட் ஆதரவு இருக்கும், ஏர்டெல் நிறுவனம் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களில் இந்த இணை பிராண்டிங் கூட்டு ஒப்பந்தத்தை செயல்படுத்த 30 கோடி அளவில் செலவழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் மற்றும் ஜியோவின் இந்த தீவிரமான சந்தைப்படுத்தல் நகர்வுகள், ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் வோடஃபோன்-ஐடியா அதன் வலுவான போட்டியாளர்களை தக்கவைத்துக்கொள்ள போராடவும், புதிய வாடிக்கையாளர்களைப் கவரவும் தேவையான மூலதன ஆதாரம் இல்லாமல் தடுமாறி வருகிறது. இது ஜூனில் முடிவடைந்த காலாண்டில் மட்டும் 12.3 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்தது, அதன் ஒட்டுமொத்த பயனாளர் தளமானது 255.4 மில்லியனாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில், ஜியோ மற்றும் ஏர்டெல் பயனாளர் தளங்கள் முறையே 441 மில்லியன் மற்றும் 321.23 மில்லியன் பயனர்களாக இருந்தனர்.